Monday, October 29, 2012

எட்டே கால் - ஒரு கதைக் கவிதை


வெளியே வெப்பத்தையும்
உள்ளே தட்பத்தையும்
தந்து கொண்டிருந்தது ஏசி ;

உள்ளே வெப்பத்தையும்
வெளியே தட்பத்தையும்
தந்து கொண்டிருந்தது என் நாசி ;

ஏழரைக்கு வருவதாய்
சொல்லியிருந்த  நண்பன் - பிறகு
தள்ளிப்போட்டு தள்ளிப்போட்டு
ஏழரையை எட்டாக்கி
எட்டை எட்டே காலாக்கினான் ;

அதைச் சொல்ல
செல்லில் இரண்டு 
மூன்று காலாக்கினான் ;

அது நவ
நாகரிக இளைஞர்
மொய்க்கும் காப்பித்தோட்டம் ;

எல்லோரும் வந்தனர் 
ஜோடியாக ;
நான் மட்டும் நின்றேன்
தனியாக ;

வயதான காவலரும்
வயதாகாத காற்றுமே
எந்தன் துணைகள் ;

என் செய்வதென்று
தெரியவில்லை ;

எட்டே கால் அடிக்க - இன்னும்
எண்பது நிமிடங்கள்
இருந்ததால் என்
இரண்டே கால்
கொண்டு அங்கும்
இங்கும் உலாவினேன் ;

அலைந்த மனது 
உலைந்தது ;

உலைந்த மனது
அலைந்தது ;

அருகிலிருந்த படிக்கட்டில்
சிறிது உட்கார்ந்து - கொஞ்சம்
நேரத்தைத் தின்றேன் ;

பிறகு செல்லுக்குள்
சென்று விளையாடி - கொஞ்சம்
நேரத்தைக் கொன்றேன் ;

ஆமையாக ஊர்ந்த
நேரம் திடீரென்று
ஓட்டுக்குள்ளே தன்னை 
இழுத்துக் கொண்டது ;

அய்யகோ என்றேன் ;

பின் மறுபடியும்
வெளியே வந்து
வழக்கம் போல்
ஊரத் தொடங்கியது;

அது ஊரினும்,
என்னுள்ளே - மெல்ல
மெல்ல சலிப்பு
ஊறத் தொடங்கியது;

எட்டே காலுக்கு
இன்னும் அறுபது 
நிமிடங்கள் இருந்தன ;

எதிரே பார்த்தேன் ;

ஒரு தனியார்
வங்கியின் ஏ.டி.எம் இருந்தது ;

அருகிலேயே ஒரு
தனியார் பிச்சைக்காரன் இருந்தான் ;

காண்பதற்குச்  சிரி(ற)ப்பாக இருந்தது ;

சாலையில் வாகனங்கள்
அதிகமாக இருந்தன ;

மனிதர்கள் குறைவாகவே
இருந்தார்கள் ;

அது
மாலை இரவாக
மாறிக் கொண்டிருந்த
நேரம் ;

கறுப்புப் போர்வையைப்
போர்த்துக் கொண்டிருந்தது
வானம் ;

அந்த 
வானத்தைப் பார்த்தேன் ;
உடுக்கள் சிரித்தன ;
நானும் பதில் சிரித்தேன் ;

யாருக்கும் காத்திராமல்
மேகங்கள் சென்று
கொண்டே இருந்தன ;

மேகத்துக்குச் செல்லும்
நேரம் என்
தேகத்திற்குச் செல்லவில்லையே
என்று அயர்ந்தேன் ;

அயர்வு போனதும்
பூமியைப் பார்த்தேன் ;

பூமியைக் காலாரக்
கண்டதுண்டு - ஆனால் 
அப்போது தான் 
கண்ணாரக் கண்டேன் ;

பூமிக்கும் நமக்கும்
எத்தனை தடைகள் ?!!

சாலை மட்டுமா ? 
நம் காலை 
அலங்கரிக்கும் செருப்பும் 
அல்லவோ தடை ?

எட்டே காலடிக்க
இன்னும் நாற்பது
நிமிடங்கள் இருந்தன ;

காற்று வீசிப்
பார்த்திருக்கிறேன் - அன்று
தான் காற்று
பேசிப் பார்த்தேன் ;

என்ன அழகாகப்
பேசியது தெரியுமா ?

பாவம், காற்றுக்காக
யாரும் நேரம்
ஒதுக்குவதே இல்லை ;

அதனால் அன்று
நான் ஒதுக்கினேன் ;

காற்று நம்மை
ஒதுக்கி விட்டால்
என்னாகுமென்று யோசித்தேன் ;

அதிர்ந்து போனேன் ;

காற்றுக்குக் கால்
என்றொரு பெயருண்டு ; என்னோடு
பேசியதால் அதற்கு
வாய் என்று பெயர் வைத்தேன் ;

எட்டே காலடிக்க
இன்னும் இருபது
நிமிடங்கள் இருந்தன ;

சன்னமாக சில
காகங்களின் குரல்
கேட்டது எனக்கு ;

நீ இரவில் 
கூட கரைவாயா ?
என்று வியந்தேன் ;

அதன் கூட்டுக்குள்
என்ன நிலவரமோ ?

"கூட்டுக்" குடும்பம் 
என்றாலே பிரச்னை
தான் போலும் ;

சற்று மேலே
பார்த்தேன்;

சடசடவென்று ஒரு 
வெளவால் பறந்தது ;

பின்னாடியே போனேன் ;

கொஞ்ச தூரத்திற்குப்
பிறகு ஒரே கும்மிருட்டு ;

அது போய்விட்டது - என்னால்
போக முடியவில்லை ;

வெளவால் பெரிய 
திறமைசாலி தான் ;

இருட்டு வந்தாலே
பயம் மனிதர்க்கு ;
இருட்டு வந்தாலே
ஜெயம் வெளவாலுக்கு ;

நம்மைச் சுற்றி
எத்தனை அற்புதங்கள் ;

மனிதனுக்கு மேலே
எத்துணை அதிசயங்கள் ;

அக்கணத்தில் அப்படியே
ஓரெண்ணப் பெருவெளியில்
தொலைந்து கொண்டிருந்தேன் ;

அவ்வமயம் நண்பன் 
"பாம் பாம்" என்று
ஹாரன் அடித்து
"ஹாய் மச்சி
சாரி டா 
கொஞ்சம் லேட்டாயிடுச்சு " 
என்று சொல்லி 
வண்டியிலிருந்து இறங்கினான் ;

அய்யய்யோ,
எட்டே கால்
வந்து விட்டதே
என்று உடைந்து போனேன் ;

No comments:

Post a Comment