Tuesday, February 28, 2012

வரம் ஒன்று கேட்டால்...

என் வருகைக்காக
பிரார்த்தனை செய்வார்கள் ;
நான் வந்ததும்
விழுந்து விழுந்து
உபசாரம் செய்வார்கள் ;

வேளா வேளைக்கு
சோறூட்டுவார்கள் ;
ஆசை ஆசையாய்
நீராட்டுவார்கள் ;

நான் அழுதால்
ஒடி வருவார்கள் ;
நான் சிரித்தால்
கூடி மகிழ்வார்கள் ;

என் ஒவ்வோர்
அசைவுக்கும் அர்த்தம்
சொல்வார்கள் ;

என் ஒவ்வோர்
செயலையும் சிலாகித்துப்
பேசுவார்கள் ;

மொத்தத்தில்
எனை ராஜாவாய்
தூக்கிக் கொண்டாடுவார்கள் ;

எனக்கு வேலையென்று
எதுவும் இல்லை

பேசாமல் தூங்கிக்
கொண்டே இருந்தால்
போதும் ;

நான் யாரென்று
கேட்கிறீர்களா ?

என்னைக் குழந்தை
என்று சொல்வார்கள்
எல்லோரும் ;

Sunday, February 19, 2012

வெயிலும் குளிரும்


உச்சி வெயில்
உச்சியைப் பிளந்தது ;
செய்வதறியாது திகைத்தேன் - கொடுஞ்சூட்டால்
எரிந்து புகைத்தேன் ;

அப்போது
பசுமாடு ஒன்று
"...மா" என்றது ;
அதற்குப் போட்டியாக
அதனருகே குட்டிப்போட்ட
ஆடொன்று முட்டிப்போட்டு
"மே...." என்றது ;
திடீரென்று எங்கிருந்தோ
வந்த காகமொன்று
ஆட்டின் தோளுரசி
"கா கா" என்றது ;
அதைக் கேட்ட
ஆலங்குயில் ஒன்று
"கூ கூ" என்றது ;
உடனே நெடுந்தூரத்தில்
பறந்த கிளிக்கூட்டமொன்று
"கீ கீ" என்றது ;
இதையெல்லாம் வெறித்துப்
பார்த்திருந்த தெருநாயொன்று
"..ள் ..ள்" என்றது ;

ஓ ! ஒண்டமிழே !!
நீ உன்னை
எவ்வாறு இந்த
ஜீவராசிகளுக்குக் கற்றுக் கொடுத்தாய் ?

ம்ம்....

வியற்றமிழே !!
வெயிலால் வெந்தவன் - இன்று
உன்னால் குளிர்ந்தேன்
உள்மனம் மலர்ந்தேன் ;

Sunday, February 5, 2012

பெல்லி மகள்

இதோ உங்களுக்காக
என் சுயசரிதை
சொல்கிறேன் ;

தயை கூர்ந்து
கேளுங்கள் ;

சில பக்கங்கள்
தான் - ஆதலின்
சற்றே பொறுத்துக்
கொள்ளுங்கள் ;
என்
ஆடை சற்று
சரிந்தாலே என்
சுயம் தெரியும் - எனக்கு
செயம் பெருகும் ;

எனவே இந்தச்
சுயசரிதையின் தலைப்பு
"சுயசரிதை" தான் ;

என் நாடு
உலக வரைபடத்தின்
நடுவில் இருக்கும் ;

அதனால் தான்
என் பிழைப்பும்
நடுவில் இருக்கிறதோ
என்னவோ ?

ஆம் ,
"வயிற்றுப்" பிழைப்பே - என்
வயிற்றுப் பிழைப்பு ;

பிறர்க்கு வாழ்க்கை
ஓடிக் கொண்டே இருக்கும் ;
எனக்கு வாழ்க்கை
ஆடிக் கொண்டே இருக்கும் ;

இந்தக் கலைக்குப்
பின்னால் எத்தனை
கொலைகள் ?
மண்நோக்கி விழுந்தாலும்
மகிழ்வோடு விழுமே
ஒரு நீர்த்துளி

அதைப் போல்
கொன்றேன் என்
அச்சத்தை அச்சமில்லாமல் ;

வண்டு குடைந்தாலும்
வாவென்று அணைக்குமே
ஒரு பூ

அதைப் போல்
கொன்றேன் என்
வெட்கத்தை வெட்கமில்லாமல் ;

கடலில் இறங்கினாலும்
கலக்கமின்றி செல்லுமே
ஒரு படகு

அதைப் போல்
கொன்றேன் என்
தயக்கத்தைத் தயக்கமில்லாமல் ;

இம்மூன்றையும் கொன்று
என்னையே தந்தேன்
பெல்லி கலைத்தாயிடம் ;

அவள்
ஏற்றாள் கொலையை - எனக்கு
கொடுத்தாள் கலையை ;

அக்கலையை வளர்த்தேன் - ஆனால்
உடம்பை வளர்க்கவில்லை ;

உடம்பை வளர்த்தால் - என்
கலையின் வளர்ச்சியேது ?

வளர்த்த கலையை
உலகுக்குக் காண்பிக்க
ஒருநாள் மேடையேறினேன் ;

விரித்து விட்ட கூந்தல் ,
வளையம் அணிந்த தொப்புள்,
தொடை தெரிந்த பாவாடை

இவற்றினோடு நின்றேன்
சபையோர் முன் ;

டர்புக்காவை ஒருவன்
வாசிக்கத் தொடங்குகையில்
எனை மறந்து ஆடினேன் ;

வேறெதையும் ஆட்டாமல்
இடுப்பையே ஆட்டினேன் ;

என்னுடலில் ஓரலை
எழுந்து அடங்கியது ;

அலை வரிசையாய் திரண்ட கூட்டம்
அலை வரிசையாய் எழுந்ததை
அலை பாயாமல் பார்த்தது ;
அப்போது தான் புரிந்தது
என் அலைவரிசையும்
அவர்கள் அலைவரிசையும்
ஒன்று தானென்று ;

நான் விடவில்லை,
இன்னும் வளைந்து
நெளிந்து ஆடினேன் ;

என்
இடுப்பாடியது - இடுப்பிருக்கும்
வயிறாடியது - வயிறிருக்கும்
தொப்புள் ஆடியது ;
தொப்புள் உள்ளிருக்கும்
செல்லாடியது - செல்லிருக்கும்
திசுவாடியது - திசுவிருக்கும்
தசையாடியது - தசையிருக்கும்
நாராடியது ;

"அசை" என்றால் நகராமல் அசைந்தது !!
"நகர்" என்றால் அசையாமல் நகர்ந்தது !!

மொத்தத்தில் சபையோடு
நாட்டியம் விளையாடியது ;

அன்று முதல் என்னிடுப்பை
கண்களால் மொய்த்தவரும்
இதழ்களால் தைத்தவரும்
ஏராளம் ஏராளம் !!

நல்ல வேளை
ஒரு மாறுதலுக்காக
எல்லாரும் என்
இடையையே பார்த்தனர் - சற்று
மேலே பார்க்காமல் !!

அன்று முதல்
ஆடுகிறேன் ஆடுகிறேன்
ஆடிக் கொண்டே இருக்கிறேன்

சனத்தை நினைத்து - விமர்
சனத்தை மறந்து ;

வயதிருக்கும் வரை ஆடுவேன் ;
வயது போனால் ?

அப்போது பார்த்துக்
கொள்ளலாம் ;

இப்போதைக்கு இது
போதும் ;

சுபம் ;

Wednesday, February 1, 2012

மனைமாட்சி


எத்தனையோ பார்த்ததுண்டு
எங்கெல்லாமோ போனதுண்டு
ஆனால்
இவ்விடத்தைப் போல் - வேறு
எவ்விடத்தையும் கண்டதில்லை ;

இது
எல்லோரும் விரும்பும் இடம் ;
எல்லோரும் திரும்பும் இடம் ;

அது வேறேதுமல்ல ;

முனை தோறும்
முளைத்த மருத்துவ
மனை தானது ;
ஒரு வகையில்
நமக்கு எல்லாம்
அனை தானது ;

கட்டிலில் இருவர்
விழுந்ததால் நாம்
தொட்டிலில் விழுந்தோம் ;

அது பிடிக்காமல்
அதனின்றும் விழுந்தோம் ;

பின் தவழ்ந்து
மறுபடியும் கட்டிலிலேயே
விழுகிறோம் ;

இடையில் எத்தனை
ஆட்டம் ?

கடலில் ஆடும்
கப்பல் ஆட்டம் ;

ஒரு சின்ன
ஓட்டை போதாதா
நம்மை விழுங்க !!

எத்தனை பேர்
இங்கே கரை கண்டார் ?
கரையைக் காணாது
இருப்பதில் தானே
கரை கண்டார் !!

மொத்தத்தில் கட்டிலிலும்
தொட்டிலிலும் விழுகின்ற
விட்டில்கள் நாம் ;

குழந்தையாய்ப் பிறக்கிறோம் ;
குழந்தையாய் இறக்கிறோம் ;

எல்லாம் இந்த
மனையில் தானே ?

பிறக்கும் போது
இருந்த உடைகள்
தானே நமக்கு
இறக்கும் போதும் ;

குழந்தையாய்ப் பிறக்கையில்
முகம் களிப்பார் ;
குழந்தையாய் இறக்கையில்
முகம் சுளிப்பார் ;

பிறவி எடுத்த
பின்னே எல்லோரும்
"கரு" வி ஆகிறோம் - அந்த
கருவத்தைக் கல்லுவது
இந்த மனைவாழ்
கருவிகள் தானே ?

நம் ஆரம்பம் பிள்ளைத்தாய் ;
நம் அஸ்தமனம் வெள்ளைத்தாய் ;

மனிதனைக் காக்க
பணம் வேண்டும்
என்று சொன்ன
இம்மனை ஒரு
செம்மனை தானே ?

இங்கே என்ன இல்லை ?
இங்கே ஏது எல்லை ?

ஆனந்தமும் இங்கே
அவஸ்தையும் இங்கே ;

முதலும் இங்கே ,
முடிவும் இங்கே ;

முட்டி மோதினால்
இவை இரண்டு
தானே வாழ்க்கையில் ;

ஆதலால் இந்த
மனையை விட்டு
எங்கே போவது ?

நமக்கும் அதற்கும்
தீராத உறவு - என்றும்
மாறாத உறவு ;

இவ்வாறெல்லாம் சிந்தித்துக்
கொண்டே தெருவில்
நடந்து போய்க்
கொண்டிருந்தேன் ;

ஒரு மருத்துவமனை
வந்தது ;

என்
முறை வந்தால்
தவறாமல் அழை
என்று சொல்லி
விட்டு வந்தேன் ;