Wednesday, February 1, 2012

மனைமாட்சி


எத்தனையோ பார்த்ததுண்டு
எங்கெல்லாமோ போனதுண்டு
ஆனால்
இவ்விடத்தைப் போல் - வேறு
எவ்விடத்தையும் கண்டதில்லை ;

இது
எல்லோரும் விரும்பும் இடம் ;
எல்லோரும் திரும்பும் இடம் ;

அது வேறேதுமல்ல ;

முனை தோறும்
முளைத்த மருத்துவ
மனை தானது ;
ஒரு வகையில்
நமக்கு எல்லாம்
அனை தானது ;

கட்டிலில் இருவர்
விழுந்ததால் நாம்
தொட்டிலில் விழுந்தோம் ;

அது பிடிக்காமல்
அதனின்றும் விழுந்தோம் ;

பின் தவழ்ந்து
மறுபடியும் கட்டிலிலேயே
விழுகிறோம் ;

இடையில் எத்தனை
ஆட்டம் ?

கடலில் ஆடும்
கப்பல் ஆட்டம் ;

ஒரு சின்ன
ஓட்டை போதாதா
நம்மை விழுங்க !!

எத்தனை பேர்
இங்கே கரை கண்டார் ?
கரையைக் காணாது
இருப்பதில் தானே
கரை கண்டார் !!

மொத்தத்தில் கட்டிலிலும்
தொட்டிலிலும் விழுகின்ற
விட்டில்கள் நாம் ;

குழந்தையாய்ப் பிறக்கிறோம் ;
குழந்தையாய் இறக்கிறோம் ;

எல்லாம் இந்த
மனையில் தானே ?

பிறக்கும் போது
இருந்த உடைகள்
தானே நமக்கு
இறக்கும் போதும் ;

குழந்தையாய்ப் பிறக்கையில்
முகம் களிப்பார் ;
குழந்தையாய் இறக்கையில்
முகம் சுளிப்பார் ;

பிறவி எடுத்த
பின்னே எல்லோரும்
"கரு" வி ஆகிறோம் - அந்த
கருவத்தைக் கல்லுவது
இந்த மனைவாழ்
கருவிகள் தானே ?

நம் ஆரம்பம் பிள்ளைத்தாய் ;
நம் அஸ்தமனம் வெள்ளைத்தாய் ;

மனிதனைக் காக்க
பணம் வேண்டும்
என்று சொன்ன
இம்மனை ஒரு
செம்மனை தானே ?

இங்கே என்ன இல்லை ?
இங்கே ஏது எல்லை ?

ஆனந்தமும் இங்கே
அவஸ்தையும் இங்கே ;

முதலும் இங்கே ,
முடிவும் இங்கே ;

முட்டி மோதினால்
இவை இரண்டு
தானே வாழ்க்கையில் ;

ஆதலால் இந்த
மனையை விட்டு
எங்கே போவது ?

நமக்கும் அதற்கும்
தீராத உறவு - என்றும்
மாறாத உறவு ;

இவ்வாறெல்லாம் சிந்தித்துக்
கொண்டே தெருவில்
நடந்து போய்க்
கொண்டிருந்தேன் ;

ஒரு மருத்துவமனை
வந்தது ;

என்
முறை வந்தால்
தவறாமல் அழை
என்று சொல்லி
விட்டு வந்தேன் ;

No comments:

Post a Comment