Sunday, February 5, 2012

பெல்லி மகள்

இதோ உங்களுக்காக
என் சுயசரிதை
சொல்கிறேன் ;

தயை கூர்ந்து
கேளுங்கள் ;

சில பக்கங்கள்
தான் - ஆதலின்
சற்றே பொறுத்துக்
கொள்ளுங்கள் ;
என்
ஆடை சற்று
சரிந்தாலே என்
சுயம் தெரியும் - எனக்கு
செயம் பெருகும் ;

எனவே இந்தச்
சுயசரிதையின் தலைப்பு
"சுயசரிதை" தான் ;

என் நாடு
உலக வரைபடத்தின்
நடுவில் இருக்கும் ;

அதனால் தான்
என் பிழைப்பும்
நடுவில் இருக்கிறதோ
என்னவோ ?

ஆம் ,
"வயிற்றுப்" பிழைப்பே - என்
வயிற்றுப் பிழைப்பு ;

பிறர்க்கு வாழ்க்கை
ஓடிக் கொண்டே இருக்கும் ;
எனக்கு வாழ்க்கை
ஆடிக் கொண்டே இருக்கும் ;

இந்தக் கலைக்குப்
பின்னால் எத்தனை
கொலைகள் ?
மண்நோக்கி விழுந்தாலும்
மகிழ்வோடு விழுமே
ஒரு நீர்த்துளி

அதைப் போல்
கொன்றேன் என்
அச்சத்தை அச்சமில்லாமல் ;

வண்டு குடைந்தாலும்
வாவென்று அணைக்குமே
ஒரு பூ

அதைப் போல்
கொன்றேன் என்
வெட்கத்தை வெட்கமில்லாமல் ;

கடலில் இறங்கினாலும்
கலக்கமின்றி செல்லுமே
ஒரு படகு

அதைப் போல்
கொன்றேன் என்
தயக்கத்தைத் தயக்கமில்லாமல் ;

இம்மூன்றையும் கொன்று
என்னையே தந்தேன்
பெல்லி கலைத்தாயிடம் ;

அவள்
ஏற்றாள் கொலையை - எனக்கு
கொடுத்தாள் கலையை ;

அக்கலையை வளர்த்தேன் - ஆனால்
உடம்பை வளர்க்கவில்லை ;

உடம்பை வளர்த்தால் - என்
கலையின் வளர்ச்சியேது ?

வளர்த்த கலையை
உலகுக்குக் காண்பிக்க
ஒருநாள் மேடையேறினேன் ;

விரித்து விட்ட கூந்தல் ,
வளையம் அணிந்த தொப்புள்,
தொடை தெரிந்த பாவாடை

இவற்றினோடு நின்றேன்
சபையோர் முன் ;

டர்புக்காவை ஒருவன்
வாசிக்கத் தொடங்குகையில்
எனை மறந்து ஆடினேன் ;

வேறெதையும் ஆட்டாமல்
இடுப்பையே ஆட்டினேன் ;

என்னுடலில் ஓரலை
எழுந்து அடங்கியது ;

அலை வரிசையாய் திரண்ட கூட்டம்
அலை வரிசையாய் எழுந்ததை
அலை பாயாமல் பார்த்தது ;
அப்போது தான் புரிந்தது
என் அலைவரிசையும்
அவர்கள் அலைவரிசையும்
ஒன்று தானென்று ;

நான் விடவில்லை,
இன்னும் வளைந்து
நெளிந்து ஆடினேன் ;

என்
இடுப்பாடியது - இடுப்பிருக்கும்
வயிறாடியது - வயிறிருக்கும்
தொப்புள் ஆடியது ;
தொப்புள் உள்ளிருக்கும்
செல்லாடியது - செல்லிருக்கும்
திசுவாடியது - திசுவிருக்கும்
தசையாடியது - தசையிருக்கும்
நாராடியது ;

"அசை" என்றால் நகராமல் அசைந்தது !!
"நகர்" என்றால் அசையாமல் நகர்ந்தது !!

மொத்தத்தில் சபையோடு
நாட்டியம் விளையாடியது ;

அன்று முதல் என்னிடுப்பை
கண்களால் மொய்த்தவரும்
இதழ்களால் தைத்தவரும்
ஏராளம் ஏராளம் !!

நல்ல வேளை
ஒரு மாறுதலுக்காக
எல்லாரும் என்
இடையையே பார்த்தனர் - சற்று
மேலே பார்க்காமல் !!

அன்று முதல்
ஆடுகிறேன் ஆடுகிறேன்
ஆடிக் கொண்டே இருக்கிறேன்

சனத்தை நினைத்து - விமர்
சனத்தை மறந்து ;

வயதிருக்கும் வரை ஆடுவேன் ;
வயது போனால் ?

அப்போது பார்த்துக்
கொள்ளலாம் ;

இப்போதைக்கு இது
போதும் ;

சுபம் ;

No comments:

Post a Comment