Wednesday, October 31, 2012

யார் அவன் ?


                                          

பெண்ணில்  அழகாய்க் கருவாகி
பென்னம் பெரிய தொன்றாகி
மண்ணில் வந்த மனிதர்கள்
மறைத்து வாழும் பொருளாகி
கண்ணில் எளிதில் தோன்றாமல்
கரத்தில்  கடிதில் சிக்காமல்
எண்ணில் அடங்கா மேகம்போல்
ஏகம் தன்னைச் செற்றிடுவான்

தேயும் நிலவைப் போலிருந்து
தளர்ந்தே பின் வளர்ந்திடுவான்
பாயும் வெள்ளம் போலாகி
பரந்து விரிந்து திரிந்திடுவான்
வீயும் எண்ணம் இல்லாமல்
வீரம் கொண்டே விளங்கிடுவான்
மாயும் வரையில் நச்சியதை
மறதி இலாது காத்திடுவான்

ஆசை என்னும் கடலினிலே
அல்லும் பகலும் முங்கிடுவான்
பூசை போலே மேலேறி
புவியில் நிதமும் தாவிடுவான்
தூசை வாரித் தலைமேலே
தூக்கிப் போடும் வேழம்போல்
மாசை மறுவை மட்டின்றி
மார்போ  டணைத்து மகிழ்ந்திடுவான்
இன்பம் வந்து சூழ்கணத்தில்
இசைக்கும் குழல்போல் மாறிடுவான்
துன்பம் ஆங்கு மேவிடவே
துவைக்குந் துணிபோல் ஆகிடுவான்
அன்பை அறனை அழித்தொழித்து
அற்பப் பதராய் அழிந்திடுவான்
பொன்னும் பொருளும் அள்ளிவந்து
போதா தென்றே வாழ்ந்திடுவான் 

பணியா திந்த உலகினிலே
பலவாய் வினைகள் செய்துவந்து
அணியா திருக்கும் அணிகலனாய்
அழகாய்  நம்மை அலங்கரித்து
தணியா தென்றும் தானிருந்து
தானாய் என்றும் செயல்பட்டு
பிணியாய் இனிதே உருமாறி
பிணைத்துக் கொல்லும் உள்ளமவன்

Monday, October 29, 2012

எட்டே கால் - ஒரு கதைக் கவிதை


வெளியே வெப்பத்தையும்
உள்ளே தட்பத்தையும்
தந்து கொண்டிருந்தது ஏசி ;

உள்ளே வெப்பத்தையும்
வெளியே தட்பத்தையும்
தந்து கொண்டிருந்தது என் நாசி ;

ஏழரைக்கு வருவதாய்
சொல்லியிருந்த  நண்பன் - பிறகு
தள்ளிப்போட்டு தள்ளிப்போட்டு
ஏழரையை எட்டாக்கி
எட்டை எட்டே காலாக்கினான் ;

அதைச் சொல்ல
செல்லில் இரண்டு 
மூன்று காலாக்கினான் ;

அது நவ
நாகரிக இளைஞர்
மொய்க்கும் காப்பித்தோட்டம் ;

எல்லோரும் வந்தனர் 
ஜோடியாக ;
நான் மட்டும் நின்றேன்
தனியாக ;

வயதான காவலரும்
வயதாகாத காற்றுமே
எந்தன் துணைகள் ;

என் செய்வதென்று
தெரியவில்லை ;

எட்டே கால் அடிக்க - இன்னும்
எண்பது நிமிடங்கள்
இருந்ததால் என்
இரண்டே கால்
கொண்டு அங்கும்
இங்கும் உலாவினேன் ;

அலைந்த மனது 
உலைந்தது ;

உலைந்த மனது
அலைந்தது ;

அருகிலிருந்த படிக்கட்டில்
சிறிது உட்கார்ந்து - கொஞ்சம்
நேரத்தைத் தின்றேன் ;

பிறகு செல்லுக்குள்
சென்று விளையாடி - கொஞ்சம்
நேரத்தைக் கொன்றேன் ;

ஆமையாக ஊர்ந்த
நேரம் திடீரென்று
ஓட்டுக்குள்ளே தன்னை 
இழுத்துக் கொண்டது ;

அய்யகோ என்றேன் ;

பின் மறுபடியும்
வெளியே வந்து
வழக்கம் போல்
ஊரத் தொடங்கியது;

அது ஊரினும்,
என்னுள்ளே - மெல்ல
மெல்ல சலிப்பு
ஊறத் தொடங்கியது;

எட்டே காலுக்கு
இன்னும் அறுபது 
நிமிடங்கள் இருந்தன ;

எதிரே பார்த்தேன் ;

ஒரு தனியார்
வங்கியின் ஏ.டி.எம் இருந்தது ;

அருகிலேயே ஒரு
தனியார் பிச்சைக்காரன் இருந்தான் ;

காண்பதற்குச்  சிரி(ற)ப்பாக இருந்தது ;

சாலையில் வாகனங்கள்
அதிகமாக இருந்தன ;

மனிதர்கள் குறைவாகவே
இருந்தார்கள் ;

அது
மாலை இரவாக
மாறிக் கொண்டிருந்த
நேரம் ;

கறுப்புப் போர்வையைப்
போர்த்துக் கொண்டிருந்தது
வானம் ;

அந்த 
வானத்தைப் பார்த்தேன் ;
உடுக்கள் சிரித்தன ;
நானும் பதில் சிரித்தேன் ;

யாருக்கும் காத்திராமல்
மேகங்கள் சென்று
கொண்டே இருந்தன ;

மேகத்துக்குச் செல்லும்
நேரம் என்
தேகத்திற்குச் செல்லவில்லையே
என்று அயர்ந்தேன் ;

அயர்வு போனதும்
பூமியைப் பார்த்தேன் ;

பூமியைக் காலாரக்
கண்டதுண்டு - ஆனால் 
அப்போது தான் 
கண்ணாரக் கண்டேன் ;

பூமிக்கும் நமக்கும்
எத்தனை தடைகள் ?!!

சாலை மட்டுமா ? 
நம் காலை 
அலங்கரிக்கும் செருப்பும் 
அல்லவோ தடை ?

எட்டே காலடிக்க
இன்னும் நாற்பது
நிமிடங்கள் இருந்தன ;

காற்று வீசிப்
பார்த்திருக்கிறேன் - அன்று
தான் காற்று
பேசிப் பார்த்தேன் ;

என்ன அழகாகப்
பேசியது தெரியுமா ?

பாவம், காற்றுக்காக
யாரும் நேரம்
ஒதுக்குவதே இல்லை ;

அதனால் அன்று
நான் ஒதுக்கினேன் ;

காற்று நம்மை
ஒதுக்கி விட்டால்
என்னாகுமென்று யோசித்தேன் ;

அதிர்ந்து போனேன் ;

காற்றுக்குக் கால்
என்றொரு பெயருண்டு ; என்னோடு
பேசியதால் அதற்கு
வாய் என்று பெயர் வைத்தேன் ;

எட்டே காலடிக்க
இன்னும் இருபது
நிமிடங்கள் இருந்தன ;

சன்னமாக சில
காகங்களின் குரல்
கேட்டது எனக்கு ;

நீ இரவில் 
கூட கரைவாயா ?
என்று வியந்தேன் ;

அதன் கூட்டுக்குள்
என்ன நிலவரமோ ?

"கூட்டுக்" குடும்பம் 
என்றாலே பிரச்னை
தான் போலும் ;

சற்று மேலே
பார்த்தேன்;

சடசடவென்று ஒரு 
வெளவால் பறந்தது ;

பின்னாடியே போனேன் ;

கொஞ்ச தூரத்திற்குப்
பிறகு ஒரே கும்மிருட்டு ;

அது போய்விட்டது - என்னால்
போக முடியவில்லை ;

வெளவால் பெரிய 
திறமைசாலி தான் ;

இருட்டு வந்தாலே
பயம் மனிதர்க்கு ;
இருட்டு வந்தாலே
ஜெயம் வெளவாலுக்கு ;

நம்மைச் சுற்றி
எத்தனை அற்புதங்கள் ;

மனிதனுக்கு மேலே
எத்துணை அதிசயங்கள் ;

அக்கணத்தில் அப்படியே
ஓரெண்ணப் பெருவெளியில்
தொலைந்து கொண்டிருந்தேன் ;

அவ்வமயம் நண்பன் 
"பாம் பாம்" என்று
ஹாரன் அடித்து
"ஹாய் மச்சி
சாரி டா 
கொஞ்சம் லேட்டாயிடுச்சு " 
என்று சொல்லி 
வண்டியிலிருந்து இறங்கினான் ;

அய்யய்யோ,
எட்டே கால்
வந்து விட்டதே
என்று உடைந்து போனேன் ;

Monday, October 22, 2012

எழுத்து


தொலை தூரத்திலிருந்தே
என்னைத் தாக்கினாய் - அதனால்
நீ ஆயுத எழுத்து ;


தாக்கி ,
இரு கண்ணால் சுட்டாய் - அதனால்
நீ சுட்டெழுத்து ;


சுட்டு, 
ஒரு கணத்தில்
உயிரோடு உயிரானாய் - அதனால்
நீ என் உயிரெழுத்து ;

விடக் கூடிய எழுத்தா நீ ?

உனை எழுத
எங்கு கிடைத்தது 
அந்தக் கடவுளுக்கு
ஒரு எழுத்தாணி ; 


ஆதலால் சற்று
யோசித்தேன் - நீ தான் 
எனக்கு நல்ல துணையெழுத்து ; 
எனை நீங்காத இணையெழுத்து ;

தனியெழுத்தாய்  நான் நின்றேன் ;
நீ வந்தாய் ;
நான் ஒரு சொல்லெழுத்தானேன் ;
உன் செல்லெழுத்தானேன் ;

நீ என்ன என் ஒற்றெழுத்தா 
கண்டு கொள்ளாது இருக்க ;
நீ என் காலெழுத்து அன்றோ
கண்டு கொண்டே இருக்க - கண்டு
நீண்டு கொண்டே இருக்க ;

நீ, ஒரு எழுத்து ;
நான் ஒரு எழுத்து ;
நீ நானானால்
நான் நீயானால்
ஓரு எழுத்து ஈரெழுத்து - இல்லை,
ஈரெழுத்து ஒரு எழுத்து ;


ஒன்று சொல்கிறேன் கேள் :

சின்னதாய் இருக்க
என் காதலென்ன குறிலெழுத்தா ?
இல்லை, அது நெடிலெழுத்து ;

கண்ணே !!
கடைசியாக ஒன்று,

எனைத் தலைகீழாக்கினாய் - 
அதனால் இனி
நீயே என் தலையெழுத்து 
தலையான  நிலையெழுத்து ;

Sunday, October 21, 2012

247 - அ முதல் ஃ வரை


காலை எழுந்து பல்லினைத் துலக்கி
இன்றைய பொழுது இனிதாய்க் கழிய
"அ" வை வணங்கினேன் ஓர் அதிகாலைப் பொழுதில் (அ - கடவுள்)
அடுத்த நிமிடம் வீதியில் , "ஆ"  மா என்றது (ஆ- மாடு)
சரி என்று, நாளிதழ் எடுக்க வெளியே வந்தேன்
ஓர் அதிசயக் காட்சியைக் கண்டேன்
அப்போது இராத்திரி ஆடிய வேட்டையினாலோ என்னவோ 
"இ" ஒன்று மரக்கிளையில் தூங்கிக் கொண்டிருந்தது (இ - ஆந்தை)
அந்த "இ" யை  "ஈ" ஒன்று  மொய்க்கவே, அவ்வி சிலிர்த்து பறந்தது
உடனே, "உ" மேல் எய்த அவ்விடம் அகன்றேன் - பின் (உ - வியப்பு)
வீட்டினுள்ளே "ஊ" தயாராகிக் கொண்டிருக்க(ஊ - உணவு) 
காலங் காலையில் தொலைக்காட்சி போட்டேன்ஓர் அலைவரிசையில் எ குஞ்சுகளோடு சுற்றியது, மாற்றினேன்  (எ - கோழி)  
இன்னோர் அலைவரிசையில் "ஏ"வை ஒருவன் எய்து கொண்டிருந்தான்  ( ஏ - அம்பு )
அதையே கொஞ்ச நேரம் பார்த்தவாறு  
"ஐ" யைக் கலந்து குளம்பி குடித்தேன் - குடித்ததும் (ஐ - சக்கரை) 
மறுபடியும் அலைவரிசை மாற்றினேன்,  "ஒ" ஒன்று அகவியது (ஒ - மயில் )
திரும்பவும் மாற்றினேன் "ஓ" வென்று பாடிக்கொண்டிருந்தார்  விக்ரம் (ஓ - வியப்புக்குறி, நடிகர் விக்ரமின் ஓ போடு பாட்டு)
மீண்டும் மாற்றினேன் ஒரு "ஒள" சுற்றியது , பிறகு சற்றே கண்ணயன்றேன் (ஒள - பூமி, ஒரு அலைவரிசையின் குறியீடு  )

பிறகு, என் "க" வில் அயர்ச்சி நீங்க எழுந்து தயாரானேன்  (க - உடல் )
டிராக் உடையை முழுக்க உடுத்தி    
பூங் "கா" விற்கு வந்தேன் வன்நடை பயில (கா - சோலை)
  "கி" என்றது ஒரு கிளி - உடனே
  "கீ" என்றது இன்னொரு கிளி - போட்டிக்கு 
  "கு" என்றது ஒரு குயில் - போதாதென்று 
  "கூ" என்றது இன்னொரு குயில் - அதைக்கேட்டு 
  "கெ" என்று முதலில் குறிலிலும் பின்பு(கெக்கே என்ற குழந்தை அழுவதாய் ஒரு கற்பனை)
  "கே" என்று நெடிலிலும் மிழற்றியது ஒரு குழந்தை 
   உடனே அதைக் "கை" யால் தூக்கினாள் அதன் அம்மா 
  "கொ" வென்றது குழந்தை மறுபடியும் -  அம்மா 
   அதட்ட "கோ" என்று  பெரிதாக அழுது பின் அடங்கியது (கோ - இரங்கல் குறி)
   அதைப் பார்த்து இலேசாக புன்னகைத்து
   சாலையோரம் கண்களை வலை  வீசினேன்
   கெள தின்னும் குதிரை, ஒரு வண்டியை இழுத்துப் பறந்தது(கெள - கொள்ளு)


அதிலே பறக்க நானும் ஆசை கொண்டேன்
அவ்வண்டியிலே ஏறி உலகெலாம் கண்டேன்
உவகை கொப்பளிக்க உலகெலாம் கண்டபின்
ஓரிடத்தில் இறங்கி சா வின் சாறு குடித்தேன்(சா - தேயிலைச் செடி)
குடித்து முடித்ததும் அருகிருந்த கோவிலுக்குச் சென்றேன்
கண்கள் பனிக்க "சி" யைப் பாடினேன்(சி - சிவன்)
"சி" யைப் பாடி பிரகாரம் சுற்றி
பூவை மேவும் "சீ" வைப் பாடினேன்(சீ - திருமகள்)
பாடிப் பரவி வெளியே வந்து
பாதணி எடுத்து காலில் அணிகையில்
அணிமையில் வந்து நாயொன்று மோந்தது
சு என்றேன், அப்படியே நின்றது(சு - விரட்டும் குறி)
சூ என்றேன், பயந்து சென்றது - அன்னணம் , (சூ - விரட்டும் குறி)
செள ஒருத்தி வந்து பூக்கூடை காட்டி(செள - சிறுமி)
வாங்கிக்கோ சாமியென்று கை கூப்பி இறைஞ்சினாள்
ஏகப்பட்ட சாமிகள் கோவிலுள் வீற்றிருக்க
ஏகனான என்னை சாமியென்று சொல்கிறாளே
என்றெண்ணி ஒருகணம் அப்படியே நின்றேன்
அவளை ஆற்ற இருமுழம் பூ வாங்கி 
ஒரு பிளாஸ்டிக் பையில் போட்டேன் - அப்போது
எந்தன் செயலை வழிமொழிவது போல்
வானமழையும் அங்கு "சோ"வென்று பெய்தது


"த" படைத்த இவ்வருமையான உலகிலே(த - நான்முகன்)
தா வென்று கேட்காமலே வருகிறதே சோனை
அடடா !! அடடா !! அற்புதம் !! அற்புதம் !!
சேனைத் துளி கொண்டு சோனை வந்ததால்
"தீ" ப்பிழம்பாம் சூரியனை மேகம் மறைத்ததே !!
அந்நேரத்தில்  நானோர் சக்கரவாகமாகி
மழைநீரை "து" வாய் வாயார உண்டேன் (து - உணவு)
அதனைக் காட்டிலும் "தூ" ஏதுமில்லை என்பதைக் கண்டேன் (தூ - தூய்மை)
மண் தேவை அறிந்து மழையை அளிக்கும்
விண் "தே"வை நினைத்து மெய் சிலிர்த்து நின்றேன் (தே - தெய்வம்)
ரோட்டிலே மனிதர்கள் ஏராளம் இருப்பினும்
பசுவனத்து கேகயமாய் தையென்று குதித்து
களிநடம் புரிந்து கழிபேருவகை கொண்டேன்
கொஞ்ச நேரத்தில் மழை விட்டது - ஆனால்
மழையை என்னால் விட முடியவில்லை
சிலையாய்ச் சமைந்து வானையே பார்த்தேன் - அப்போது
என் பின்னின்ற ஒருவர் தோ தோ என்று (தோ -  நாயை விரட்டும் ஒலி)
தன்  நாயை அழைத்து என்னருகில் வந்து
 "சார் கொஞ்சம் வழி விடுங்க போகணும்" என்றார்

வழி விட்டேன், அவர் தன்வழி போனார்
அவர் போனதும் நானும் என்வழி போனேன்
போகின்ற போது பா ஒன்று தோன்றியது(பா - கவிதை)
பாவை  நான் எழுதி முடித்ததும்
அதற்கு அழகாய் இசை சேர்ப்பது போல்
பிப்பீ என்றூதி மாட்டுக்காரன் வந்தான்
வீதியிலே  கச்சேரி செய்யும்  பாட்டுக்காரன் வந்தான்
என் பாவை அவன் இசையில்
கற்பனை செய்தேன், எப்படியிருக்கும் என்று
நாட்டுப்புறப் பாடல்கள் ஏராளம் இருந்தாலும்
ரோட்டுப்புறப் பாடலாய் என்பா இருக்குமென்று
மனதிற்குள் சொல்லி மனதிற்குள் சிரித்தேன்
என் சிரிப்பைத் தானும் கேட்டதோ என்னவோ
சாலைப் "பூ"வும் தன்னிதழ் விரித்து சிரித்தது
நடந்ததை எண்ணி அசைபோட்ட வாறே
நடையினை போட்டு வீட்டினை அடைந்தேன்
"ஏன் தாமதம் ?  நடைபயிற்சி சென்று
என்ன வெட்டி முறித்தாய்" என்று மனைவி கேட்டாள்
"மழையைக் கொஞ்சம் ரசித்தேன்" என்று சொன்னேன் - அதைஉனப்
பொருட்படுத்தாதவளாய் பையில் என்னென்றாள்
பிளாஸ்டிக் பூ என்றேன் !! புரியாமல் விழித்தாள்
மல்லிப்பூவை பிளாஸ்டிக் பையில் வாங்கியதால்
பிளாஸ்டிக் பூ ஈது என்று மொக்கை போட்டேன்
அய்யோ என்றலறி பையினைப் பறித்தாள்
பையைக் கூட பையப் பறிக்காமல் போகிறாளே
அவளின் மனதில் என்ன கோபமோ என்று யோசித்தேன் ;


அவளைத் தொடர்ந்து அடுக்களை சென்றேன்
"உன் கோபம் ரொம்பவே ந" என்றேன் 
"அப்படியென்றால் என்ன என்றாள் ?"
"ந என்றால் மிகுதி" என்றேன்
அவள் பதிலேதும் சொல்லாமல் அப்படியே நின்றாள்
" "நா"வை அடக்காமல் வார்த்தை சொன்னாயே
 உனக்கு "நி" யில் வெகுளி இருக்கக் கூடாது ( நி - அண்மை)
 நீ அப்படியிருந்தால் என் மனம் தாங்காது - ஆதலால்
சினத்தைப் போக்க "நு" செய வேண்டும் ( நு - தியானம்)
நிலவு குடியிருக்கும் அழகான முகத்தில்
கோபம் வந்தால்  "நூ" வெடிக்கும் ( நூ - எள் )​
எனவே, நை நை என்றிராமல்
கோபம் தவிர்த்து  "நே" வைக் கொடுத்தால்( நே - அன்பு)
"நொ"  நம் மனதை வாட்டாது ( நொ - துன்பம்)
"நோ" நம் உடலை அண்டாது ( நோ - நோய்)
மனிதன், ஒரு நெள மாதிரி( நெள - மரக்கலம்)
அதில் கோபம் என்றொரு பொத்தல் விழுந்தால்
நெள உடனே கவிழ்ந்து மூழ்கிப் போகும்"
என்று எனக்குத் தெரிந்த அறிவுரை கூறி
அவள் சினத்திற்கான காரணம் கேட்டேன் ;


"காலை எழுந்ததும் தூக்கம் கலக்க
காபியில் சீனி குறைவாய் கலந்துவிட்டேன்
அதைக் குடித்ததும் உன் அம்மா
ம வை  நெஞ்சில்  நிறைத்து வைத்து( ம - நஞ்சு)
மா வின் பெயரால் என்னை ஏசினாள்(மா - விலங்கு)
அகவையில் எனை விட மூத்தவள் அல்லவா 
என்னால் எதுவும் செய்ய முடியவில்லை
அதுவே உன்மேல் கோபம் மீ மிசை வந்ததென்றாள் ; (மீ - மேலே)
ஓ !! இவ்வளவு தானா சங்கதி என்று
ஆசை மனைவியின் அருகில் சென்று
"செல்லமே,
எம்மாவுக்கு இப்போது மூ க்காலம்(எம்மா - என் அம்மா, மூ - மூப்பு)
அதனால் இப்படி நடப்பது இயல்பு
இனியும் அப்பருவம் மே அடையாது (மே - மேம்பாடு)
ஆனவரை அம்மாவிடம் மே வாயிரு (மே - அன்பு)
ஆனது ஆகட்டும், போனது போகட்டும்
உனக்கு துணையாய் நானென்றும் உண்டு
மையில் தீட்டிய உன்னழகிய கண்கள்(மை - அஞ்சனம்)
மையல் ததும்ப புன்னகைக்க வேண்டும்
அதில் கண்ணீர் நித்தமும் கூடாது என்று சொல்லி - அவள்
கண்ணீர்த் துளியைச் சுண்டி எறிந்தேன்


அவ்வமயம், என்னவள் 
தன் கள்ளுண்ட இதழை இருமுறை மடித்து
காந்தி மதி போல சாந்தம் செறிந்து
தன்னழகிய கண்ணை "ய" மாய் விரித்து( ய - அகலம்)
என்னருகில் வா என்று சொல்லாமல் சொன்னாள் - அக்கணமே
அவள் பக்கம் பக்கம் பக்கம் வந்தேன்
வெட்கம் வெட்கம் வெட்கம் எனும்படி
வானில் பறக்கும் "வி" யின் சிறகாய்(வி - சிறகு)
அவளின் இமைகள் கிளைத்து நின்றன
என் கண்ணும் அவள் கண்ணும்
ஒன்றை ஒன்று தின்று கொள்ள
அவள் கண்ணிலிரிந்து காதல் "வீ" விழவே( வீ - வீழும் மலர்)
நான் தீயின் முன்னின்ற "வை" யாக ஆனேன் ( வை - வைக்கோல்)
அவள் கண்ணை விட  ஓர் "ஃ" உண்டோ உலகிலே 

Sunday, October 7, 2012

மழை தந்த மழை

நீல மலைச் சாரலை  
வெள்ளி மழை மேகங்கள் 
குறையேதும் இல்லாமல்
நுரையோடு குளிப்பாட்ட 

ஓராடை அணியாமல்
சுற்றிவரும் மென்காற்று   
நீராடை அணிந்து கொண்டு
அங்குமிங்கும் சுற்றிவர 

அம் மண்ணும் நாணத்தால்  
செம்மண்ணாய்  உருமாறி 
காற்றடித்த வேகத்தால்  
கல்கொண்டு கண் மூட 

கள்ளொன்று இருந்தாலும்
ஆடாத பனைமரங்கள்
காற்று வந்த தள்ளியதும் 
ஆனந்தக் கூத்தாட 

கால் கொண்ட மேகமாய் 
சிறகடித்த நாரையும்
தன் மனைவி பேர்சொல்லி
கூடுதேடி பறபறக்க

யானையையே விழுங்கும்
கரும்புத் தோட்டங்கள் 
பச்சைப் பசுங்கடலாய் 
வெகுதூரம் பரந்திருக்க 

ஆள் யாரும் உளரோ என்று 
அக்கம்பக்கம் பார்த்துவிட்டு 
ஆசைக் காதலியின்
வழவழப்புக் கன்னத்தில் 
சற்றேனும் தாமதியாமல் 
வாயழுந்த முத்தமிட்டேன் ;

Wednesday, October 3, 2012



காளமேகரின் சிலேடை "கள் " ளில் மதி மயங்கி அதன் தாக்கத்தில் நானும் வெண்பா வடிவில் சிலேடைகளை எழுதிப் பார்க்க ஆசைப்பட்டேன்.  

அதன் வடிவே இந்த சிலேடைகள். 


1.

சிக்காமல் சண்டையிடும் சிக்கியதும் கைகூப்பும்
அக்காலே கொண்டவர்க் காட்பட்டும்  - உக்கிரமாய்ச்
சாதலையே அவ்வுயிர்க்குத் தந்திடுமே ஆதலால்
காதலுக்கு நேராம் கரி

பொருள் :

யானையானது நமக்கு எளிதில் கட்டுப்படாது. அப்படிக் கட்டுப்பட்டால் நம்மிடம் அன்பாக இருந்து நன்றியுடன் இருந்து கைகூப்பும். பாகனுக்கு ஆட்பட்டும்  இருக்கும். ஆனால் திடீரென்று மதம் பிடித்து பாகனையே அழித்துக் கொன்று விடும். அதே போல் காதலும் நமக்கு எளிதில் வசப்படாது. வசப்பட்டாலோ நம்மிடம் வாஞ்சையாக இருப்பது போல் இருக்கும். அதற்குப் பின் பிரிந்து விட்டால் (Break - Up ஆனால் ) நினைவுகளால்  அது கொண்டவர்களையே  கொன்று விடும். 

2. 

வட்டமாய் வீற்றிருக்கும் வெள்ளிநிறம் பெற்றிருக்கும்
பட்டொளியில் நம்மெதிரே புன்சிரிக்கும் - திட்டமுடன் 
தந்திரமாய் தேய்ந்தழிந்து தான்வளரும் எப்போதும் 
சந்திரனும் சில்லறையும் தான் 


பொருள் :

நிலா வெள்ளி நிறத்தில், வட்டமாக வானத்தில் வீற்றிருக்கும்.  வெள்ளை பட்டு போன்ற ஒளியில் நமக்கு எதிரே புன்னகை பூக்கும். வளரும். வளர்ந்த பின் தேயும். அதே போல் சில்லறைக்  காசுகளும் (எல்லாக் காசும் அல்ல ) வெள்ளி நிறத்திலும், வட்டமாகவும் இருக்கும்.  நம் கையில் இருக்கும் இந்தக் காசானது கொஞ்ச நாள் மெல்ல மெல்ல வளர்ந்து ,பெருகி பிறகு திடீரென்று தேய்ந்து சுருங்கி அழிந்து விடும். பிறகு மறுபடியும் வரும். போகும். 

3.

வண்ணங்கள் கண்டிருக்கும் வட்டமுகம் கொண்டிருக்கும் 
கண்ணெதிரில் காம்புடனே காட்சிதரும் - திண்ணமுறப் 
பன்மடலாய்ப் பல்கரங்கள் பாங்குடனே பெற்றிருக்கும் 
மின்விசிறிக் கொப்பாம் மலர்   


பொருள் :

நம் வீட்டில் சுழலும் மின்விசிறி பல வண்ணங்களில் கிடைக்கும். வட்டமான முகத்தைப் பெற்றிருக்கும்.  விட்டத்திலிருந்து ஒரு பகுதி நீண்டு வர தொங்கிய படியே காட்சி அளிக்கும். பல கரங்கள் கொண்டு திகழும். அதே போல மலர்களும் பல வண்ணங்களில் இருக்கும். வட்டமான முகத்தைக் கொண்டிருக்கும். தன் விரிந்த மடல்களுடன்  காம்புடன் காற்றில் ஆடி அழகாகக் காட்சியளிக்கும்.  இந்த மடல்கள் தான் மின்விசிறியின் கரங்களுக்கு உவமையாக சொல்லப்பட்டிருக்கிறது. ஒரு மின்விசிறியைத் தூக்கிப் பிடிக்க எப்படி ஒரு Rod தேவைப்படுகிறதோ அதே போல பூவைத் தாங்கிப் பிடிப்பதற்கும் ஒரு காம்பு தேவைப்படுகிறது. இந்தப் பாடலில் பூவின் காம்பு மின்விசிறியின் Rod- க்கு உவமையாக சொல்லப்பட்டிருக்கிறது.