Friday, April 30, 2010

வெண்மை


நாஷனல் ஜியாகரஃபிக்
சானலில் ஒரு காட்சி

ஒரு வெண்புலி
எழுந்து நின்று
ஒரு மனிதனைக்
கட்டிப்பிடித்துக் கொண்டது ;

அப்போது மனதிற்குள்
சொல்லிக் கொண்டேன்

"புலியே உன்னை
வெள்ளையாகப் படைத்ததில்
தவறே இல்லை";

என்று ;

Thursday, April 29, 2010

நகல் மொழி


ஒத்துக் கொள்கிறேன் 
என் அசலைப் 
போல் நானொன்றும்
அழகில்லை தான் ;

ஆனால் 
இந்த உலகத்தில் 
எனக்குத் தான் 
ஏகப்பட்ட கிராக்கி ;

என் அசலுக்கும்
எனக்கும் நிறைய
வேற்றுமைகள் ;

என் அசலைப்
போல் எனக்கு
வாஸம் கிடையாது - அதனால்
யாருக்கும் என்னிடம்
நேசம் கிடையாது ;

என் அசலைப்
போல் நான்
வாடிப் போவதில்லை - ஆனால்
யாரும் என்னைச்
சூடிக் கொள்வதுமில்லை ;

என் அசலை
வண்டினங்கள் சுற்றும் ;
என்னை ஒரு
ஈ கூட சுத்தாது ;

என் அசலுக்காக
தண்ணீர் சிந்துவார்கள் ;
எனக்காக துளி
கண்ணீர் கூட சிந்தமாட்டார்கள் ;

என் அசலுக்கு
சூரிய வெளிச்சம்
தேவை ;

எனக்கு மின்விளக்கின்
வெளிச்சம் தான்
தேவை ;

என்று
பார்க்கப் பார்க்க
புலம்பிக்கொண்டே இருந்தது
என் குளியலறைப்
பிளாஸ்டிக் பூ ;


என்ன செய்வது ?

நகல் என்றாலே
அப்படித் தானே :


Wednesday, April 28, 2010

ஒரே சிம்மாசனத்தில் இரண்டு பேர்


தலைக்கவசம் அணிந்தவாறு
வேகமாக பைக்கை
ஓட்டுகிறான் கணவன் ;
தலைவனின் தோளில்
ஐவிரல் பதித்தவாறு
பின் இருக்கையில்
இருக்கிறாள் மனைவி ;

பைக்கைப் போலவே
வேகமாகச் செல்கிறது
அவர்களின் வாழ்க்கையும் ;

கல்யாணத்திற்கு முன்
காதலிப்பதற்கு  நேரம்
பத்தாமலேயே இருக்கிறது ;

ஆனால்...
சில சமயம்
கல்யாணத்திற்குப் பின்
காதல்  கூட
பத்தாமலேயே இருக்கிறது ;

பைக்கில் கணவனும்
மனைவியும் போகையில்
ஒருவர் முகத்தை
ஒருவர் பார்க்கமுடியாது ;

ஆனால்,
ஒருவர் மனத்தை
ஒருவர் உணர
முடியாதா ?

பார்த்துப் பழகும்
காதலில் நெருக்கம்
அதிகம் ;

உணர்ந்து உருகும்
காதலில் அணுக்கம்
அதிகம் ;

இருவர் வாங்கும்
மூச்சுக் காற்றிலும்
இருவர் பேசும்
பேச்சு மொழியிலும்
கலந்து தானிருக்கிறது
அவர்களுக்கான காதல் ;

இவர்கள் காதலைப்
பற்றி காலத்திற்கு
என்ன கவலை ?

அது எப்போதும்
போல் சென்றுகொண்டே
தானிருக்கிறது ;
இரண்டொரு நிமிடங்கள்
போக்குவரத்து விளக்கில்
நிற்கிறது வண்டி ;

அலுவலகம் வர
இன்னும் கொஞ்ச
நேரமே இருப்பதால்
கணவனின் தோளில்
அழுத்தமாக விரல்
பதிக்கிறாள் மனைவி ;

அலுவலகம் வர
இன்னும் கொஞ்ச
நேரமே இருப்பதால்
வண்டியை மெதுவாகச்
செலுத்துகிறான் கணவன் ;

போக்குவரத்து நெரிசலில்
மெல்ல மெல்ல
நசுங்கிக் கொண்டிருக்கிறது
அவர்களின் காதல் ;