Friday, January 13, 2012

உனக்கும் எனக்கும்


உறக்கம் உன்னைத் தொட்டுவிட்டால்
உடனே உறங்கப் போகாதே - நீ
உறங்கப் போகும் முன்னாலே - உன்
உருள்விழி இரண்டும் மயங்கிடுமே - அம்
மயக்கம் வேண்டும் எனக்கு - இதில்
தயக்கம் உண்டோ உனக்கு ?

சோகம் உன்னைச் சுட்டுவிட்டால் - கண்
சோனை நீரைத் துடைக்காதே
மேகம் போலே நீயழுதால் - உன்
முகமும் அழகாய்ச் சுருங்கிடுமே - அச்
சுருக்கம் வேண்டும் எனக்கு - தனி
வருக்கம் சுருக்கம் உனக்கு ?

தூசி கண்ணில் விழுந்துவிட்டால்
தோழியை கடிதே அழையாதே - உன்
நாசி செய்யும் முகபாவம்
நன்றாய் உடனே மலர்ந்திடுமே - அப்
"பா" வம் வேண்டும் எனக்கு - இதில்
பாவம் உண்டோ உனக்கு ?

நகமும் கையில் வளர்ந்துவிட்டால்
நங்காய் அதை நீ நறுக்காதே
சுகமாய் நீண்ட நகக்கண்ணில்
சரமாய் காமம் ஒளிந்திடுமே - அக்
காமம் வேண்டும் எனக்கு - அது
சேமம் தானே உனக்கு ?

குளித்து முடித்து வருகையிலே
குயிலாய் ஆடை அணியாதே - நீ
ஒளித்து வைத்த அழகினிலே - ஒரு
குழந்தை எனக்குத் தெரிந்திடுமே - அக்
குழந்தை வேண்டும் எனக்கு - இதில்
குழப்பம் உண்டோ உனக்கு ?
(குழந்தையும் நிர்வாணமாகத் தானே இருக்கும். அது தான் இந்தப் பாடலில் குறிப்பிடுகிறேன். வேறெதுவும் அல்ல )

நெற்றிப் பரப்பில் எப்போதும்
நீ திலகமிட்டுக் கொள்ளாதே - தனைச்
சுற்றி எதுவும் இல்லாமல் - உன்
நெற்றி நிர்வாணம் ஆகிடுமே - அந்த
நிர்வாணம் வேண்டும் உனக்கு - அதன்
நிர்மாணம் வேண்டும் எனக்கு ;

கழுத்தைச் சுற்றி எந்நாளும் - சிறு
கனகம் அணிந்து திரியாதே
அழுத்தம் இல்லாக் கழுத்தினிலே - உணவு
அருந்தும் அழகு தெரிந்திடுமே - அவ்
அழகே வேண்டும் எனக்கு
அதுவே பொறுப்பு உனக்கு

மாதே உந்தன் காதுகளில்
மறந்தும் துளைகள் போடாதே
காதில் துளையும் அற்றிருந்தால்
உன்னழகும் மிச்சம் ஆகிடுமே - அம்
மிச்சம் வேண்டும் எனக்கு - இதில்
ஒச்சம் உண்டோ உனக்கு ?

எத்தனை உனக்குள் இருக்கிறதோ
அத்தனை எனக்குள் சுரக்கிறதோ ? - இப்
பித்தனை சற்றே மனமிரங்கி நீ
பொறுத்தருளாது போனாலும் அடி
இன்னும் வேண்டும் எனக்கு
இதுவே தொல்லை உனக்கு







1 comment:

  1. நன்று.. நன்று..!

    நங்கையின் மேல் நம்பி கொண்டிருக்கும் காதல் நன்று நன்று..!

    ReplyDelete