Saturday, December 1, 2012

1. ஒளியில் ஓர் இருள்


யாருமே இல்லாத மொட்டை மாடியில்
காற்று மட்டுமே சடுகுடு பாட
பாறை போலே அசையா திருந்து
ஊரை எல்லாம் நோட்டம் விட்டான்
ஊறிச் சலித்த உத்தமன் ஒருவன்

வைர நகைகளை தூவென்று தள்ளி
கறுப்பு நிறத்து வான அவையில்
மேகத் தாதியர் வழிவிட்டு நிற்க
தேகம் முழுதும் பளிச்சென்று சுடர 
தெள்ளென்று வந்தாள் வெண்ணிலா ராணி
வீணை இல்லாத வெள்ளை வாணி
நிலா ராணியென்று பெயருற்ற போதும்
நின்றவாறே அவள் கோலோச்சி நின்றாள்
சட்டென்று வந்தது ஒளிகோடி வெள்ளம்

மேலே பார்த்தது போதுமென் றெண்ணி
மேலே இருந்து நகரைப் பார்த்தான்
காதல் கதையின் கவிதை நாயகன்

வண்ண வண்ணப் பொடிகள் போல
வெள்ளை பச்சை சிவப்பு மஞ்சள் 
தங்கம் வைரம் வெள்ளி என்றே
பற்பல நிறத்தில் ஒளிர்ந்தன விளக்குகள்
பற்பல  வகையில் தெறித்தன ஒளிகள்

நகரை விழியால் நகர்ந்து பார்த்தவன்
எதிரே நின்ற சாலை விளக்கை
ஓரிரு நொடிகள் வெறித்துப் பார்த்தான்
நீண்ட உடலுற்ற மின்மினி ஒன்று
விட்டு விட்டு ஒளிர்தல் போலே
முணுக் முணுக்கென்று எரிந்தது விளக்கு
விட்டு விட்டது எரிந்த போதும்
அந்த ஒளியையும் விட்டி ல்லாமல்
வந்து நெருங்கின விட்டில் பூச்சிகள்
விட்டிலை விட்டிலை காதல் பூச்சுகள்

சாலை விளக்கை வெறித்த பின்பு
காலை வருடிய கறுப்புப் பேசியை
கையில் எடுத்து உற்றுப் பார்த்தான்
தையல் கிழிந்த நெஞ்சைக் கொண்டோன்

பேசி எடுத்தவன் பேச்சற்றி ருக்கையில்
பேசி இடத்திலும் பேசியது ஒளி
பேசி பார்த்ததும் வீசியது வலி
வளியைப் போலே வலியும் வீசிட
பேசிகொண்டு தினம் பேசிப் பார்த்தவன்
பேசி பார்க்காது வீசி எறிந்தான்
விழுந்த இடத்திலும் விழுந்தது ஒளி

தென்றல் வந்து தீண்டிய பின்னே
மரமே மெதுவாய் ஆடி நிற்கையில்
ஆடாதி ருக்குமோ சின்னப் பூச்செடி  ?

அஃதே போல,

தன்னைச் சுற்றிலும் விளக்குகள் எரிய
அவனின் மனதிலும் விளக்கொன்று எரிந்தது

அந்த விளக்கு எந்த விளக்கு ?
கறுப்பை உமிழும் கறுப்பு விளக்கு

வானில் தெரியும் வெள்ளி நிலாவும்
மாதம் ஒருநாள் மறைந்து போகும்
தெருவில் எரியும் வண்ண விளக்கும்
மின்விசை சொன்னால் அணைந்து போகும்

ஆயின்,

அவனின் மனதில் எரிந்த விளக்கோ
அணையா தவனை ஆக்கிரமித்து
ஹாஹா ஹாஹா ஹாஹா வென்றே 
பேயைப் போலே வெடித்துச் சிரித்து
அவனை முழுதாய் ஆட்டிப் படைத்தது
ஓயாத வனை வாட்டி வதைத்தது

பொத்தான் இல்லை எந்திரம் இல்லை
எதுவும் இல்லை விளக்கை அணைக்க

அணைந்து போயென்று சீறிய போதும்
அணைந்து விடேனென்று கெஞ்சிய போதும்
சொல்லிய சொல்லை கேட்கா வண்ணம்
வண்ணம் இன்னும் கூட்டிய வாறு
ஒளிகூடி நின்றது கறுப்பு விளக்கு

அவனின் இதயம் தவித்துத் தவித்து
தவிப்பிற் கேயோர் எல்லை கடந்து
ஆயிரம் சில்லாய் சிதறிப் போனது

சில்லு சில்லாக சிதறிய போதும்
துண்டு துண்டாக உடைந்த போதும்
சில்லில் துண்டில் சின்னஞ் சிறிதாய்
சிரித்து நின்றது கறுப்பு விளக்கு
பொறுப்பு தவறா சிறப்பு விளக்கு

இனிமேல் எதையும் தாங்கும் எண்ணம்
எனக்கு இல்லை என்றே சொல்லி
புயலில் பெயரும் மரத்தைப் போலே
அவனும் உடனே மண்ணில் சாய்ந்தான் 

சுற்றி எங்கிலும் ஒளிமழை பெய்ய
சுற்றி அவனைச் சூழந்து நின்று
பாழும் இருட்டு கவிந்து வந்தது
கறுப்புக் குழம்பாய் குவிந்து வந்தது

- தொடரும்

1 comment: