Thursday, December 20, 2012

நாகமாணிக்க வேட்டை – 2 – வேலன் புறப்பட்டான்

ஆனைமலை தன்னில் 
ஆனைபலம் கொண்ட 
வீரப்புகழ் மிக்க
வேலன் வாழ்ந்தான்

நாகலோகம் சென்று
நங்கையொருத்தி கொண்டு
நாடு திரும்பிவர
ஆசைப் பட்டான்

ஆறு மாதங்களில்
ஆறு தனைக்கண்டு
நங்கையோடு வர
அன்னை சொன்னாள்

ஆறு மாதங்களில்
ஆறு இல்லையெனில்
வேறு வேலையிலை
வருக என்றாள்

அன்னை சொன்னமொழி
வேதமென்று அவன்
ஆனைமலை விட்டு
தூரம் போனான்

சோலைமலை சென்று
காளி கோவில் கண்டு
உண்டு குடித்தவன்
தூங்கிப் போனான்

பகல் எனக்கொரு
இகல் எனும்படி
புகல் இடந்தேடி
இருளும் வந்தான்

இருள் தனக்கொரு
பொருள் தரும்படி
அருள் ஒளிகொண்டு
நிலா வந்தாள்

நிலா தனக்கொரு
கனா எனும்படி
பலா போன்றதொரு
பாவை வந்தாள்

வீர வேலனவன்
தூக்கம் கெட்டான்
பாவை பார்த்துவிட
ஆசைப் பட்டான்

வேலிருந்தும் வந்த
தூக்கம் தன்னை
வீறுகொண்டு அவன்
வெல்ல வில்லை

தூணின் மறைவிலவன்
ஒளிந்து கொண்டான்
காண அரியதோர்
காட்சி கண்டான்

காளி தனைக்கண்டு
பக்தி மிகக்கொண்டு
பாத மலர்தொட்டு
பூசை செய்ய

தங்கப் பழங்கொண்டு
தங்க மலர்கொண்டு
தங்க விளக்கோடு
தங்கம் போலே

தங்கக் குடத்தோடு
தண்ணீர் கொண்டுவர
அருகி ருந்தவொரு
வாவி சென்றாள்

தண்ணீர் பட்டவுடன்
பன்னீர் மங்கையவள்
தங்கக் குடமங்கு
மூழ்கிப் போக

பூசைத் தட்டையவள்
நீரில் முங்கியதும்
பூசைத் தட்டுமுடன்
மூழ்கிப் போக

தண்ணீர் பார்த்தவள்
கண்ணீர் விட்டாள்
அப்பு நீரிலவள்
உப்பும் போட்டாள் 

அழுகை வேலனவன்
நெஞ்சில் பாய
அழகு தேவதையின்
அருகில் போனான்

பெண்ணே உன்
பேரென்ன என்றான் 
விடையொன்று தான்
கேட்க நின்றான்

பொன்மாலை நேரமும்
போன பின்பு
பொன்மாலை போலங்கு
வந்த பெண்ணும்

பொன்மாலை என்
பேர் என்றாள் ;
தேவலோகம் என்
ஊர் என்றாள் ;

"மனிதர் யாவரும்
பார்க்கா வண்ணம்
பூசை செய்யவே
இரவில் வந்தேன் ;

ஒவ்வொரு நாளும்
குடமும் தட்டும்
குளம் தொட்டதும்
மூழ்கிப் போகும்

மாயம் யாதெனத்
தெரிதல் இன்றி
காயம் மேவிட
கரையில் நின்றேன்

காளி தேவிக்கொரு
பூசை செய்ய
பாவி எனக்கொரு
வழியும் இல்லை"

என்று பாவையவள்
கண்கள் பனித்தாள் ;
கண்கள் பனித்ததும்
வேலன் பணிந்தான் ;

குளத்துக் குள்ளே
நானும் சென்று
பொருள் யாவையும்
கொணர்ந்து வருவேன்

அதுவரை கரையில்
இருங்கள் என்றே
அவனும் உடனே
குளத்தில் குதித்தான் ;

குளத்துக் குள்ளே
கும்மிருட் டிருந்தும்
மீனைப் போலவன்
நீச்சல் செய்தான் ;

சற்று நேரத்தில்
ஒளிகோடி வெள்ளம்
கண்களைத் தின்னும்
காட்சி கண்டான் ;

ஒளியை நோக்கித்
தானும் சென்றான் ;
ஒளியைக் கண்டதும்
ஒளிமயம் ஆனான் ;

அந்த ஒளி
தெய்வ ஒளி ;
அருளைப் பாய்ச்சும்
காளி ஒளி ;

கரையில் கண்ட
காளி கோவில்
நீரின் அடியில்
இருத்தல் கண்டு

உள்ளம் உடலம்
சீவன் எல்லாம்
தன்னால் அங்கே
உருகக் கண்டான்;

தீயில் பொருட்கள்
உருகு வதுண்டு ;
நீரில் பொருட்கள்
உருகு வதுண்டோ ?

ஆனால் வேலன் 
மனிதன், எனவே
நீரில் அவனும்
உருகிப் போனான் ;

கோவில் உள்ளே
அவனும் போக
மலரின் வாசம்
வீசப் பெற்றான் ;

நீருக் குள்ளே
சுடரும் விளக்கை
கண்கள் விரியத்
தானும் கண்டான் ;

காளியின் சிலையை
கண்ணில் கண்டு
"அம்மா " என்றே
பாதம் தொட்டான் ;

காளி மகிழ்ந்து
காட்சி தந்தாள் ;
வேலன் சிரத்தைத்
தாழ்த்தி நின்றான் ;

"வேலா உன்னால்
உள்ளம் மகிழ்ந்தோம் ;
சேவை குணங்கண்டு
நாமும் நெகிழ்ந்தோம் ;

என்னருள் உனக்குக்
கூடி வரும் ;
தருவேன் உனக்கு
இரண்டு வரம் ;"

என்று காளி 
கனிந்து சொன்னாள் ;
வேலன் உடனே
பணிந்து சொன்னான் ;

"கரையில் அங்கே
கன்னி ஒருத்தி
உன்னைப் பூசிக்க
உள்ளம் கொண்டாள் ;

அவளுக் கொருவழி
நீயும் சொன்னால்
ஆறுதல் எனக்கு
உண்டு என்றான் "

காளி உடனே
அவனைப் புகழ்ந்து
நல்ல தாயொரு
வார்த்தை சொன்னாள் ;

"ஆடம் பரங்கள்
ஆகா தெனக்கு
அன்பு ஒன்றையே
நெஞ்சில் கொண்டு

அம்மா என்றெனை
அழைத்தால் போதும்
அக்கணமே நான்
வருவேன்" என்றாள் ;

வேலன் உடனே
உவகை கொண்டு
இரண்டாம் வரத்தை
கேட்க லுற்றான் ;

"நாகலோகம் சென்று
இளைய அரசியை
நானும் கொண்டு
நாடு திரும்ப

அன்னாய் நீயொரு
வழி சொல்வாய் ;
நீயே என்
சரணம்" என்றான் 

"விடிந்த உடனே
மேற்கில் போ, 
கண்ணில் தெரியும்
புற்றைக் காண்,

புற்றின் வழியே
நடந்து சென்றால்
நாக லோகம்
நீயம் போகலாம்


ஆனால் அதற்கொரு
பாம்பாக வேண்டும்
பாம்புகள் மட்டும்
அவ்வழி போகும்

நான் உனக்கொரு
மாத்திரை தருவேன் 
மாத்திரை உண்டால்
பாம்பாய் ஆவாய்

ஒருமணி நேரம்
மட்டும் தான்
மாத்திரை அது
வேலை செய்யும்

ஆதலின் நீயும்
அதையே உண்டு
கானகம் நீங்கி
வானகம் போவாய்"

என்று காளி
நல்வழி சொன்னாள் ;
வேலன் கேட்ட
இருவரம் தந்தாள் ;

காளி அன்னையின்
பாதம் தொட்டு
வேலன் அவளின்
இன்னருள் பெற்று

மேற்குத் திக்கை
நோக்கிப் போனான்
போன பின்பு
என்ன ஆனான் ?
































1 comment:

  1. முதலில் நண்பருக்கு நன்றி :)

    கதையைக் கவிதையாக்கி
    கவிதையில் நயமுமாக்கி
    நயத்தில் ரசனையேற்றி
    ரசனையை எம் சிந்தனையில் ஏற்றியதோர் சிறப்பு இதுவென்பேன் :)

    கவிதையை முழுவதும் ரசித்தேன் என்றாலும் மிகசிறப்பான பகுதிகளைக் கொடுக்கிறேன்.

    // ஆறு மாதங்களில்
    ஆறு இல்லையெனில் //

    அட்டகாசம். ஆறு மிகச்சரியான இடத்தில் இருக்கிறது :)

    // தண்ணீர் பார்த்தவள்
    கண்ணீர் விட்டாள்
    அப்பு நீரிலவள்
    உப்பும் போட்டாள் //

    அப்பு நீரில் உப்பு. அருமை.

    // தீயில் பொருட்கள்
    உருகு வதுண்டு ;
    நீரில் பொருட்கள்
    உருகு வதுண்டோ ?

    ஆனால் வேலன்
    மனிதன், எனவே
    நீரில் அவனும்
    உருகிப் போனான் //

    அருமை அருமை என்று சொல்வதைத் தவிர என்ன சொல்வேன்! :)

    ReplyDelete