Thursday, December 13, 2012

யார் எழுதிய பாடல் ?

இந்தப் பாடல் நற்றாயிரங்கல் என்னும் துறை. தன் மகள் காதல் துன்பத்தால் வருந்துவது கண்ட தாயொருத்தி மனம் தாளாமல் பாடும் வகையில் இப்பாடல் அமைந்துள்ளது. 

நான் கொடுக்கும் இந்த விளக்கம் அமரன் கதை என்ற நூலில் பாரதியின் பேத்தி விஜயா பாரதி எழுதியது.

பாடல் : 

கவுண்டவுண்ட தெனமாரன் கணைபொழிய
மிகச்சோர்ந்து கண்ணீ ராற்றிற்
கவுண்டவுண்ட மார்பினளாய் மகளுன்னை
நினைந்துமனங் கரையா நின்றாள்
கவுண்டவுண்ட சீதையினை மாலையிட்ட
பெருமானே கவுண்ட  னூரிற்
கவுண்டவுண்ட ராமசாமித் துரையே
விரைவில் கலவி செய்யே

பாடல் வகை : யமக அறுசீர்க் கழி நெடிலடி ஆசிரிய விருத்தப்பா


கவுண்டவுண்டதென = இதைக் கவுண்  தாவுண்டது என எனப் பிரிக்க வேண்டும் . அதாவது , கவுண் கற்கள் தாவி வருவது போல. இதில் கவுண்டாவுண்ட என்றிருக்க வேண்டியது குறுக்கல் விகாரத்தால் கவுண்டவுண்ட என்று ஆனது.

மாரன் = மன்மதன்

கணைபொழிய = கணைகளைப் பொழிய, மலர் அம்புகளைப் பொழிய

(கவுண் கற்களைப் போல் மலர் அம்புகளைப் பொழியும் மன்மதன்)

மிகச்சோர்ந்து = மிகவும் சோர்ந்து

கண்ணீராற்றில் = கண்ணீர் என்னும் ஆற்றில்

கவுண்டவுண்ட மார்பினளாய் = கவ்வுண்ட, உண்ட மார்பினளாய் 

கவ்வப்பட்ட, உருண்ட மார்பினை உடையவளாய் . இங்கே கவ்வுண்ட என்பது விகார விதியால் கவுண்ட என்று ஆனது. உருண்ட என்பது தொல்காப்பியத்தின் கெடுதி அதிகார விதிப்படி உண்ட என்று ஆனது. 

மகள் = இதற்குப் பொருள் சொல்ல வேண்டியதில்லை.

உன்னை நினைந்து மனம் கரையா நின்றாள் = இங்கே கரைய என்பது கரையா என்று ஆனது.

கவுண்டவுண்ட சீதையினை = இதை, கா உண்டு, அவ்வுண்டு, அ சீதையினை என்று பிரித்துப் படிக்க வேண்டும்.

இலங்கையில் ஒரு கா உண்டு. கா என்றால் சோலை. இங்கே அசோகவனம். உண்டு என்றால் இங்கே இருந்த என்ற பொருள். அவ்வுண்டு என்றால் , அந்த இடத்திலே இருந்த என்று பொருள்.இங்கே காவுண்டு என்பது கவுண்டு என்று குறுகியது. 

அ - அந்த, சீதையினை - சீதா தேவியை

(அசோகவனத்தில் இருந்த சீதையை)

மாலையிட்ட பெருமானே = சீதா தேவியின் நாயகனாகிய , ராமனுக்கு நிகரானவனே

(எட்டயபுர மன்னனின் பெயர் ராமசாமித்துரை. இங்கே கடவுளும், மன்னனும் ஒன்றாக பாவிக்கப்படுகிறார்கள். பெயர் ஒன்றாக இருப்பதாலும், குணப்பெருமைகள் சமமாக இருப்பதாலும் இவ்வாறு எழுதப்பட்டுள்ளது. மேலும், வேதங்களின் கூற்றுப்படி அரசன் மகாவிஷ்ணுவின் அவதாரம். இராமனும் மகாவிஷ்ணுவின் அவதாரம்)


கவுண்டனூரில் = கவுண்ட மா நகரில்

கவுண்டவுண்ட ராமசாமித்துரையே = கவுண்ட வம்சத்தில் உதித்த ராமசாமித்துரை மன்னனே. இங்கே உண்ட அறுசுவை உணவுகளைச் சாப்பிடுகிற மன்னனே.

(எல்லோரும் உண்பதைப் போலல்லாமல் தேவர்களைப் போல் அரிய உணவு வகைகளை உண்ணும் மன்னன் என்பதற்காக உண்ட என்ற சொல் போடப்பட்டிருக்கிறது)

விரைவில் கலவி செய்யே - கூடிய சீக்கிரம் என் பெண்ணோடு ஒன்று சேர்க.

பி.கு = இப்பாடல் சுப்பையாவை சுப்பிரமணிய பாரதியாராக மாற்றிய பாடல்.  இதற்குப் பிறகு தான் என் தாத்தாவிற்கு பாரதி என்ற பட்டம் கிடைத்தது.





No comments:

Post a Comment