Saturday, March 31, 2012

இரவு

இரவே !!
நீண்டு படுத்திருக்கும்
கரிய அரவே !!

நீ எங்கிருந்து வருகிறாய் ?

பகலெனும் புற்றுக்குள்ளிருந்து
வருகிறாயா ?

ஊர் முழுதும்
ஊர்ந்து ஊர்ந்து
போகிறாயே !!

எங்கே ?

போகும் வழியில்
நீ உமிழும்
மாணிக்கம் தான்
மீன்களாய் சுடர்கின்றனவோ ?

ஆளரவம் இல்லாத
நேரத்தில் ஒரு
நீளரவம் போல்
வருகிறாயே !!

எனக்குத் தெரியும்
அதெதற்கு என்று ;

பாவம் - உனக்குப்
பசிக்கிறது ;

அசுரப் பசி ;

பேதாபேதமின்றி எல்லோரையும்
அப்படியே விழுங்குகிறாயே ?
ஏன் ?

புரிகிறது எனக்கு ;

பாம்புகள் எல்லாம்
விழுங்கித் தானே
உண்ண வேண்டும் ;

பூமியில் உள்ள
"நல்" பாம்பு கடிக்கும் ;
வானிலே உள்ள
"அல்" பாம்பு விழுங்கும் ;

நீ
எல்லாவற்றையும் விழுங்குகிறாய்
வெளிச்சம் தவிர ...

ம்ம்ம்....

உனக்கு அது
ஒவ்வாதோ ?

உண்மை தான் .....

வெளிச்சம் வந்தால்
நீ மறைந்து போகிறாய் ;
அழிந்து போவதில்லை ;

நெருப்போடு சேர்ந்த எதுவும்
நெருப்பாவது போல்
உன்னோடு சேர்ந்த எதுவும்
கருப்பாகி விடுகிறதே !!
கருப்பாகி உன்னில் ஒரு
உறுப்பாகி விடுகிறதே ;

இருட்டில் நடக்கையில்
குழியும் ஒன்று தான்
மூடியும் ஒன்று தான்
எறும்பும் ஒன்று தான்
பாம்பும் ஒன்று தான்
யானையும் ஒன்று தான்
பூனையும் ஒன்று தான்
அரசனும் ஒன்று தான்
ஆண்டியும் ஒன்று தான்...

எங்கும் கருப்பு , எதிலும் கருப்பு
அடடா என்ன விந்தை இது !!

இதை உணரவைத்த
இராவே !!
முற்றும் அறிந்த ஞானி நீ ;

ஞாயிறு ஒருப்பெருஞ்ஜோதி,
நீ கருப்பெருஞ்ஜோதி ;

ஆனால் ஒரு ஆச்சரியம்.....
இந்த ஜோதி
யாவரையும் குருடாக்கி விடுகிறதே !!

நீ வந்தால்
குன்றிமணி ஒளியின்றி
இரண்டடி முன்னால்
எடுத்து வைக்க ஏலுமா ?

உன்னைக் கண்டால்
எவர்க்கும் பயம் ;

பூமியில் உள்ள
கறுப்பினத்தைக் கண்டு மக்கள்
ஒடுக்குவர் ;

வானத்தில் உள்ள
கறுப்பினத்தைக் கண்டு மக்கள்
ஒடுங்குவர் ;

வெண்ணிற மேகமும் உன்னருகே
மைந்நிற மேகமாய்த் தெரிகிறதே ;

உனக்குள்ளும் ஒளி உண்டோ ?

பகலின் பல சத்தங்கள்
உனக்குள் அடங்கி விடுகிறதே !!

பல மொழிகள்
தெரிந்த மௌனி நீ ;

பகலுக்கு பகலவன் தேவை ;
உனக்கு நிலவு தேவையா ?
இல்லை ;

ஆரையும் சாரா அம்சமே
உன் சாராம்சம் ;

நீ திரளத் திரள
உலகம் சொக்குண்டு துயில்கிறதே ;

ஆதலால் ஒரு
மந்திரவாதி நீ ;

தேவன்
மனிதனைப் படைக்கையில்
உன்னையும் கேட்டுத்தான்
படைத்து முடித்தானோ ?

எது எப்படியோ...

என் கேள்விகள்
நீண்டு கொண்டே இருக்கும்
உன்னைப் போலவே !!

பதில் தேவையில்லை,
கேள்வி கேட்கும்
சந்தோஷமே போதும் ;

இரவே !! இப்போது
நான் விடை பெறுகிறேன் ;

மீண்டும் சந்திக்கிறேன்
உன்னைக் "கேள்விகளோடு" மட்டும் ;

No comments:

Post a Comment