Tuesday, March 20, 2012

என்னென்று சொல்வேன்

என்னென்று சொல்வேன்
அந்த அனுபவத்தை
என்னென்று சொல்வேன்..

எரிமலை திரட்டிய
தீக்குழம்பும்
பனிமலை உருட்டிய
பனிப்பந்தும்
கைகோர்த்து நடந்தால்
எப்படி இருக்கும்!!
அப்படியல்லவா இருந்தது
இல்லை.. இல்லை..

குற்றால அருவியின்
வீரியமும்
ஒற்றை மழைத்துளியின்
வாஞ்சையும்
ஒன்றோடொன்று பொருதினால்
எப்படி இருக்கும்!!
அப்படியல்லவா இருந்தது
இல்லை.. இல்லை..

நிலவற்ற வானத்தின்
ஏக்கமும்
மழைகொண்ட மேகத்தின்
கர்வமும்
ஒன்றையொன்று மணந்தால்
எப்படி இருக்கும்!!
அப்படியல்லவா இருந்தது
இல்லை.. இல்லை..

காட்டாற்று வெள்ளத்தின்
அவசரமும்
இரைதேடும் நாரையின்
நிதானமும்
சமரசம் செய்துகொண்டால்
எப்படி இருக்கும்!!
அப்படியல்லவா இருந்தது
இல்லை.. இல்லை..

கொடிபிரிந்த மலரின்
சோகமும்
தாய்கண்ட இளங்கன்றின்
உவகையும்
ஒருசேரத் தோன்றினால்
எப்படி இருக்கும்!!
அப்படியல்லவா இருந்தது
இல்லை.. இல்லை..

கண்ணெதிரில் நகையாடும்
மிருகத்தனமும்
ஆழ்மனதில் குடிகொண்ட
தெய்வாம்சமும்
ஒன்றுக்குள்ளே ஒன்றிருந்தால்
எப்படி இருக்கும்
அப்படியல்லவா இருந்தது
இல்லை.. இல்லை..

இல்லவே இல்லை
இன்னமும் இன்னமும்
அழகாகவும் நயமாகவும்
எப்படிச் சொல்வதென்று
தெரியவில்லை - நீ
எனக்குக் கொடுத்த
முத்தத்தை;

No comments:

Post a Comment