Thursday, April 28, 2011

ஐந்தா ? ஆறா ?

காகமே !
சுற்றித் திரியும்
சின்னஞ்சிறிய கரிய
மேகமே !!

நான் உன்
ரசிகன் ;

நீ கறுப்பாக
இருப்பதனால் உன் மேல்
வெறுப்பு காட்டுவோர் உண்டு ;
ஆனால் நான் அப்படியல்ல
உன் மேல் அலகிலாத
விருப்பு கொண்டவன் நான் ;

நான் உன்
ரசிகனாயிருந்தாலும் உனை
நின்று ரசித்ததில்லை ;

ஆதலால்
இன்று ஒருநாள்
மற்ற அலுவல்களையெல்லாம்
ஒதுக்கிவிட்டு உன்னை
நின்று ரசிக்கலாமென்று
முடிவு செய்தேன் ;

எங்கு பார்த்தாலும்
நீ இருந்தாய் - அதனால்
உன்னைக் கண்டுபிடிப்பது
ஒன்றும் கஷ்டமாகயில்லை ;

உன்னை நன்றாக
உற்றுப் பார்த்தேன் ;
உற்றுப் பார்த்ததில்
நிறைய பெற்றுக் கொண்டேன்
நிறைய கற்றும் கொண்டேன்

நாங்களெல்லாம் எப்பொழுதேனும்
வீட்டை விட்டு
வெளியே வருகிறோம் ;
ஆனால் நீயோ
அந்த ’வெளி’யையே
வீடாக வைத்துக் கொண்டிருக்கிறாய் ;

நாங்கள் கட்டணம்
கட்டினால் தான்
மின்விசிறி காற்றளிக்கும் - ஆனால்
உனக்கோ கட்டணம்
ஏதும் இல்லாமல்
ஒரு விசிறியை
அந்த காற்றே அளிக்கிறது ;

எங்களுக்கு வெளிச்சந்தரும்
மின் விளக்குகளை
நாங்கள் அணைக்க வேண்டும் - ஆனால்
உனக்கு வெளிச்சந்தரும்
சூரியனையும் நிலவையும்
நீ அணைக்கத் தேவையே இல்லை ;

நாங்கள் பயணிக்க
இரண்டோ அல்லது
மூன்று சக்கரங்கள்
கொண்ட வாகனங்கள் தேவை ;
உனக்கோ உன்
இரண்டு சிறகுகள்
தான் சக்கரங்கள் ;

கறுப்பாக இருந்தாலும்
உன்மேல் யாரும்
இனவெறி தாக்குதல்
நடத்துவதில்லை - ஆயிரம்
யுகங்கள் ஆகியும்
இந்த பூமியில்
இனவெறித் தாக்குதல்
நடக்காத இடமேயில்லை ;

நீ முற்றும்
கறுப்பாக இருந்தால்
உன்னை அண்டங்காக்கை
என்று எக்களிப்போருண்டு ;

ஆனால் உன்
பெயர்க் காரணத்தை
நான் மட்டுமே அறிவேன் ;

"ஹே மனிதா
அறம் மறந்து
நெறி பிறழ்ந்து - நீ
நிலைகெட்டுத் திரியாதே
உன் அன்னை
பூமியை நீ
காக்கத் தவறாதே"

என்ற கருத்தைத்
தான் நீ
பெயராக வைத்திருக்கிறாய் ;

பெயரில் மட்டுமல்ல..
அந்தக் கருத்தை
உன் இதழிலும் வைத்திருக்கிறாய் ;

அதனால் தான்
போகும் இடமெல்லாம்
"கா கா" என்று
கரைந்து கொண்டே போகிறாய் ;

நீ
"கா கா" என்று
கரைந்தாலும் மனிதர்கள்
யாரும் கரைவதில்லை ;

நீ
"கா கா" என்று
கரைந்தாலும் உன்னை
"போ போ" என்று
விரட்டியவரக்ளே அதிகம் ;

கருத்து தெரிவுக்கும்
செயற்கை ஊடகங்கள்
ஏராளம் உண்டு ;

ஆனால் நீ
கருத்து தெரிவுக்கும்
இயற்கை ஊடகம் ;

உனக்காக செலவிட்ட
ஒரு நாள்
என்னுள் பல
எண்ணங்களைச் சிறகடித்துப்
பறக்கச் செய்திருந்தது ;

உன்னை விட்டுப்
பிரிகையில் எச்சமிடுவதைப்
போல் என்
மனதில் ஒரு
கேள்வியை நீ
தூவிச் சென்றுவிட்டாய் ;

ஐந்தறிவு கொண்ட
நீ இன்புற்றிருக்கிறாய் ;
ஆறறிவு கொண்ட
நான் துன்புற்றிருக்கிறேன் ;

ஆதலால்
நீயே சொல்
ஐந்து பெரிதா ?
ஆறு பெரிதா ?

2 comments:

  1. //கறுப்பாக இருந்தாலும்
    உன்மேல் யாரும்
    இனவெறி தாக்குதல்
    நடத்துவதில்லை - ஆயிரம்
    யுகங்கள் ஆகியும்
    இந்த பூமியில்
    இனவெறித் தாக்குதல்
    நடக்காத இடமேயில்லை ;//
    உண்மை...!!!!

    ReplyDelete
  2. //கறுப்பாக இருந்தாலும்
    உன்மேல் யாரும்
    இனவெறி தாக்குதல்
    நடத்துவதில்லை - ஆயிரம்
    யுகங்கள் ஆகியும்
    இந்த பூமியில்
    இனவெறித் தாக்குதல்
    நடக்காத இடமேயில்லை ;
    //

    அற்புதமான சிந்தனை...

    ReplyDelete