Monday, April 18, 2011

சாயல்

உண்ட மயக்கத்தால் நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தேன்
அம்மா வந்து எழுப்பினாள்
"டேய் அவா எல்லாம் வந்திருக்காடா
உன்ன பாக்கணும்னு சொல்றா
சீக்கிரம் எழுந்து வா"
தூக்கம் மலர்தல் ஒரு வரம்
தூக்கம் கலைதல் ஒரு சாபம்
ம்ம்... என்ன செய்வது
எனக்கு எழவே பிடிக்கவில்லை
மறுபடியும் மறுபடியும் படுக்கையில் விழவே பிடித்தது
இருப்பினும் அம்மாவாயிற்றே அவள் கட்டளைக்குக் கீழ்ப்பணிந்தேன்
கசங்கிய உடைகளை சரிசெய்த படி
கசக்கிய விழிகளை துடைத்த படி
வந்திருந்த விருந்தினரைப் பார்க்கக் கிளம்பினேன்
ஓரைந்து பேர் வந்திருந்தார்கள்
வந்திருந்தோரின் முகமுன் முகமன் கூறினேன்
என்னைப் பார்த்ததும் அவர்கள் பேச ஆரம்பித்தார்கள்
"ஹே அவன் மூஞ்சி அப்படியே அவன் அப்பாவை உரிச்சு வச்சிருக்கு
அவன் கண்ணு அவன் அம்மா கண்ணு தான்
அவன் கலர் அவன் பாட்டி கலர்
அவன் வழுக்கை கூட ......."
அந்த கடைசி வாசகம் எனக்குப் பிடிக்கவேயில்லை
உடனே அந்த இடத்தை விட்டகன்றேன்
என் முகம் என் அப்பா போன்றதாம்
என் கண் என் அம்மா போன்றதாம்....
அவர்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளட்டும்
எனக்கு அதைப் பற்றியெல்லாம் கவலையில்லை
வந்திருந்தோர்க்குத் தான் ஒரு விஷயம் தெரியவே தெரியாதே
என் உள்ளம் மட்டும் உன் போன்றது என்று !!!

2 comments: