Tuesday, June 29, 2010

ஒரு வண்ணக்கதை

வானம் தாராளமாக
விரிந்திருந்தது ;
மேகம் மழைநீரைச்
சொரிந்திருந்தது ;
சூரியன் நெருப்பால்
எரிந்திருந்தது ;
காற்று குளிரோடு
திரிந்திருந்தது - அந்த
நேரத்தில் தன்மேல்
இருந்தவர்கள் மிகவும்
குறைவு என்பது
நிலத்திற்கு நன்றாகத்
தெரிந்திருந்தது ;

அப்போது
ஐந்து பூதங்களின்
முன்னிலையில்
ஆறு போல் அழகாக
வளைந்து
ஏழு வண்ணங்களால்
கூடி
எட்டாத உயரத்தில்
வானவில் வசீகரமாக
வீற்றிருந்தது ;

வானவில்லை யாரும்
பார்க்கவில்லை - இருப்பினும்
வானவில் அதற்காகக்
கவலைப்படவில்லை ;

"இங்கே ஏன்
வந்தாய் ?" என்று
வானமும் கேட்கவில்லை ;

"நான் வந்தே
தீருவேன்" என்று
வானவில் முழங்கவுமில்லை ;

இந்திரவில்லே !
நீ எங்கிருந்து வருகிறாய் ?

உன் ஆயுள்
சில நேரந்தான் - ஆயினும்
நீ கவலையே
படாமல் சந்தோஶமாக
வாழ்ந்து விடுகிறாய் ;

மனிதனின் ஆயுள்
பல காலந்தான் - ஆனால்
அவனால் இந்த
உலகத்தில் சந்தோஶமாக
வாழ முடியவில்லை ;

மனிதனுக்கும் உனக்கும்
ஒரே வித்தியாசந்தான்
உனக்கு வண்ணங்கள்
அவனுக்கு எண்ணங்கள் ;

உன் வண்ணங்களின்
எண்ணங்களை மட்டுமல்ல
தன் எண்ணங்களின்
வண்ணங்களையும் மனிதன்
புரிந்து கொள்வதில்லை ;

ஏழு வண்ணங்களிருந்தும் - நீ
ஏழையாய் இருப்பதில்லை ;
அந்த வானமே
உனக்குத் தானே ?!

நீ
தனியாக நிற்பதில்லை
தனித்து நிற்கிறாய் ;
தனித்து நிற்பதனால்
தன்னிறைவோடு இருக்கிறாய் ;

நீ
உனக்காக வாழ்கிறாய் ;
உள்ளொளியோடு திகழ்கிறாய் ;

மனிதன்
பிறர்க்காக வாழ்கிறான் ;
தலைகனத்தோடு திரிகிறான் ;

"நான்" என்ற
எண்ணம் உனக்குக்
கிஞ்சித்தும் இருப்பதில்லை ;

ஆதலால் நீ
வானவில் மட்டுமல்ல
ஞானவில்லும் கூட ;

உன்னைப் பற்றி
இத்துணை எழுதியும்
திருப்தி அடையாமல்
நான் யோசித்துக்
கொண்டே இருந்தேன் ;

ஆனால் நீ
எனக்காகக் காத்திராமல்
மெல்ல மெல்ல
மறைந்து கொண்டிருந்தாய் ;

No comments:

Post a Comment