Wednesday, April 28, 2010

ஒரே சிம்மாசனத்தில் இரண்டு பேர்


தலைக்கவசம் அணிந்தவாறு
வேகமாக பைக்கை
ஓட்டுகிறான் கணவன் ;
தலைவனின் தோளில்
ஐவிரல் பதித்தவாறு
பின் இருக்கையில்
இருக்கிறாள் மனைவி ;

பைக்கைப் போலவே
வேகமாகச் செல்கிறது
அவர்களின் வாழ்க்கையும் ;

கல்யாணத்திற்கு முன்
காதலிப்பதற்கு  நேரம்
பத்தாமலேயே இருக்கிறது ;

ஆனால்...
சில சமயம்
கல்யாணத்திற்குப் பின்
காதல்  கூட
பத்தாமலேயே இருக்கிறது ;

பைக்கில் கணவனும்
மனைவியும் போகையில்
ஒருவர் முகத்தை
ஒருவர் பார்க்கமுடியாது ;

ஆனால்,
ஒருவர் மனத்தை
ஒருவர் உணர
முடியாதா ?

பார்த்துப் பழகும்
காதலில் நெருக்கம்
அதிகம் ;

உணர்ந்து உருகும்
காதலில் அணுக்கம்
அதிகம் ;

இருவர் வாங்கும்
மூச்சுக் காற்றிலும்
இருவர் பேசும்
பேச்சு மொழியிலும்
கலந்து தானிருக்கிறது
அவர்களுக்கான காதல் ;

இவர்கள் காதலைப்
பற்றி காலத்திற்கு
என்ன கவலை ?

அது எப்போதும்
போல் சென்றுகொண்டே
தானிருக்கிறது ;
இரண்டொரு நிமிடங்கள்
போக்குவரத்து விளக்கில்
நிற்கிறது வண்டி ;

அலுவலகம் வர
இன்னும் கொஞ்ச
நேரமே இருப்பதால்
கணவனின் தோளில்
அழுத்தமாக விரல்
பதிக்கிறாள் மனைவி ;

அலுவலகம் வர
இன்னும் கொஞ்ச
நேரமே இருப்பதால்
வண்டியை மெதுவாகச்
செலுத்துகிறான் கணவன் ;

போக்குவரத்து நெரிசலில்
மெல்ல மெல்ல
நசுங்கிக் கொண்டிருக்கிறது
அவர்களின் காதல் ;

1 comment:

  1. how beautifully u have portrayed the relationship between the man and his wife! after reading this kavidai, my perspecctive towards married couple on the way to work in the bike has changed...it makes me wonder of they are feeling the same way as u have explained in your kavidai.
    this is def one of my favourite works of yours.
    rock on!

    ReplyDelete