Monday, March 8, 2010

நீயும் மழையும்

Hi Guys,
I am posting a poem written by me. Would love to know your comments.

மனோகரமான
மாலை வேளையில்
சாலை வீதியில்
வேலை ஏதுமின்றி
போய்க்கொண்டிருந்தேன் ;

அன்றைக்கு
ஏனோ வானம்
மேகக்கூட்டமாய் காட்சியளிக்காமல்
மேகமூட்டமாய் காட்சியளித்தது ;

அதைக் கண்டவுடன்
காரணம் ஏதுமின்றி
ஆழ்மனம் களித்தது ;
சிறிது நேரத்தில்
எங்கிருந்தோ வந்த - ஒரு
குளிர்காற்று என்
முகத்தைத் தாக்கியது ;

அந்த
மென்காற்றில் கொஞ்சம்
வேகம் தெரிந்தது ;
என்னை அபகரிக்க
வேண்டும் என்ற
மோகம் தெரிந்தது ;
காற்றால் தேகம்
கிறங்க - அது
உன் ஸ்பரிசம்
எனத் தெரிந்து
கொண்டேன் ;
அந்தத் தொடுதலில்
உன் எண்ணம்
யாதெனப் புரிந்து
கொண்டேன் ;

அப்போது பார்த்து
வான்கொடியில் உலரப்
போட்டிருந்த மேகத்துணிகளைக்
காற்று பிழிய
ஆகாயம் மேலிருந்து - ஒரு
நீர்வீழ்ச்சியைப் பொழிய

அந்நீர்த்துளிகள் யாவும்
என் மேலே விழுந்தன;
விழுந்து சுவைத்தறியா
தித்திப்பைக் கொடுத்தன ;
ஆம் !
என்னில் விழுந்த
நீர்முத்துக்கள் யாவும்
நீ கொடுத்த முத்தங்களாய்
உருமாறியது ;

தலையில், நெற்றியில்
கண்களில், இதழ்களில்.... என
நீ செய்த பயணத்தால்
உள்ளம் கள்ளுண்ட
வண்டைப் போல் தடுமாறியது ;

அவ்வமயம் ஒரு
மின்னல் வெட்டியது -
நீ புன்னகைத்தாய் ;
சில
கணங்கள் கழித்து
இடியொலி கேட்டது;
நீ பலமாகச்
சிரித்துக் கொண்டிருந்தாய்;

உன் சிரிப்பின்
அர்த்தம் எனக்குப்
புரியவில்லை;
உன்முத்தங்கொடுத்த போதையால்
கண்ணுக்கேதிரே எதுவும்
தெரியவில்லை;

அப்போது திடீரென்று
உன் மழைக்கரத்தால்- என்னை
இழுத்து
வளைத்து
அணைத்து - பின்
ஆரத் தழுவினாய்;
வன்மையும் மென்மையும் - ஒரு
சேரத் தழுவினாய்;
காதல் செய்யா
இடம் பார்த்து
நீ நெருங்கினாய்;
நான் நொறுங்கினேன்;
என்னுடலின் இடமெங்கும்
ஆளத் தொடங்கினாய்; நான்
மீள முயன்றேன்;
தோற்றுப் போனேன் !! உனக்கு
அடிமை ஆனேன்;

பின்
மயக்கம் தெளிந்து
கண் விழித்தேன்;
உன்னைத் தேடிச்
சுற்றுமுற்றும் பார்த்தேன்;
மழை விட்டிருந்தாலும்
வானம் விடவில்லை;
அப்போது
புரிந்து கொண்டேன்; நீ
எப்போதும்
என்னோடு இருப்பாய் என்று
தெரிந்து கொண்டேன்;

என்
இல்லம் நோக்கி
நடக்க ஆரம்பித்தேன்;

1 comment:

  1. 'அப்போது பார்த்து
    வான்கொடியில் உலரப்
    போட்டிருந்த மேகத்துணிகளைக்
    காற்று பிழிய'
    superb lines! to explain passion through metaphors always paints a unique picture in our mind. And the best thing i liked about the kavidai was that it didnt have any cliched descriptions about beauty. truly refreshing - like a summer rain. rock on :)

    ReplyDelete