Friday, November 11, 2011

லகரத்தில் ழகரத்தில் ளகரத்தில் காதல்


காலையில் பிறந்து காளையை எழுப்பி
வாலையாம் குமாரி வாளையே சுழற்றி
வேலையைக் கொடுக்க வேளையை மறந்து
தாளையே அடைத்து தாளையே கொணர்ந்து
மூலையில் அமர்ந்து மூளையைக் கசக்கி
கோலையே எடுத்து கோழையாய் இராமல்
எழுதினேன் அவளை "ல" விலே "ழ" விலே "ள" விலே

ஒலியே கண்ணின் ஒளியே
வலியே கொஞ்சும் வளியே
கலியே வாழ்வின் களியே

கலவே நினைவுக் களவே
பலவே ஜொலிக்கும் "பள"வே( பள = பளபளப்பே என்ற பொருளில்)
உளவே முத்த உழவே

கள்ளே வைரக் கல்லே
புள்ளே தங்கப் புல்லே
அள்ளே தனித்த அல்லே

(அள் = அள்ளப்படுவது , செறிவு, வன்மை, கூர்மை)

வெள்ளமே அச்சு வெல்லமே
பள்ளமே தைக்கும் பல்லமே (பல்லம் - அம்பு)
பலமே இனிப்பு பழமே
தலமே இயங்கு தளமே
உளமே மிகுந்த உலமே (உலம் - திரட்சி , வலிமை)

ஆளியே பாயும் ஆழியே
காளியே மேயும் காலியே
சோலியே சிரிப்புச் சோழியே
கோலியே கொத்தும் கோழியே

உலைப்பே பிரம்மன் உழைப்பே
அலைப்பே "அந்த" அழைப்பே
மழைப்பே எந்தன் மலைப்பே
தழைப்பே கவிதைத் தலைப்பே
களைப்பே கவனக் கலைப்பே
முலைப்பே நெஞ்சு முளைப்பே
சுளிப்பே உதட்டுச் சுழிப்பே
களிப்பே நேரக் கழிப்பே
விழைப்பே இன்ப விளைப்பே
இளைப்பே தங்க இழைப்பே

வள்ளியே மோக வல்லியே
வில்லியே இதய விள்ளியே
எல்லியே எந்தன் எள்ளியே (எல்லி - இரவு , என்னை எள்ளி நகையாடுபவளே என்ற பொருளில் எழுதினேன்)
புல்லியே மையப் புள்ளியே ( புல்லி - பூவிதழ் , புல்லுதல் = காமம் கொள்ளுதல்)
அல்லியே நெஞ்சு அள்ளியே (அள்ளி - வெண்ணெய் அல்லது என்னை அள்ளுபவளே என்றும் கொள்ளலாம்)
கல்லியே திருடு கள்ளியே (கல்லி - குருவி)

உள்ளவே உனை உள்ளவே
உள்ளவே இன்னும் உள்ளவே
என உள்ளவே நான் செல்லவே
உள்ளமே அது வீழ்ந்திட

இல்லையே ஒன்றும் இல்லையே - இதற்கு
மேல் சொல்வதற்கு ஒன்றும் இல்லையே
இல்லையே என்றும் இல்லையே - உன்
அழகுக்கு என்றுமில்லை எல்லையே




2 comments:

  1. அருமை நண்பரே. ழகரத்துக்கும் லகரத்துக்கும் ளகரத்துக்கும் வித்தியாசம் தெரியாத ஒரு தலைமுறை தமிழகத்தில் தோன்றி விட்டது என்பது தான் கசப்பான உண்மை.உங்களைப் போன்றவர்கள் தொடர்ந்து எழுதினால் தான் ஓரளவு மாற்றம் ஏற்படும்.

    ReplyDelete
  2. மிக்க நன்றி நண்பரே !!!

    ReplyDelete