Tuesday, September 6, 2011

என் செய்வேன் - கவியரங்கத்தில் பாடியது


தமிழ் வணக்கம்

என்னுள் தனை
வைத்ததா அன்றி
தன்னுள் எனை
வைத்ததா என்று
அய்யுறும் வண்ணம்
என் ஊனாகி
என் உயிராகி
என்னுளத்த மர்ந்து
எனையாட்சி செய்யும்
என் அனை தமிழே - நீ
எனை அணை தமிழே !!

அவை வணக்கம்

என்பால் உள்ள
அளப்பரும் அன்பால்
என் கவி புகழ்ந்து
என் பிழை திருத்தி
என் தோள் தட்டி
எனை நல்வழிப்படுத்தும்
எந்தை நிகர் கவிஞர்காள் !!
எண்ணரும் அறிஞர்காள் !!

நான்
என்னோற்றேன் தங்கள்
ஆசி பெறுதற்கு ?!

உங்கள் காலடி
மலர் வணங்கி

அடியேன் சமைத்ததை
அவைக்கண் வைக்கின்றேன்
சுவை பொறுத்தருளுக ;

*******************

கவிதைத் தலைப்பு
என்னென்றேன் தலைவரிடம் ;
கவிதைத் தலைப்பு
"என்" என்றார் தலைவர் - அது
என்னென்று எனக்குத்
தெரியவில்லை - என்
செய்வதென்று புரியவுமில்லை ;

என் சொல்வதென்று
சின்னேரம் யோசித்தேன் ;
கடைசியில் "என்"
சொல்வதென்று முடிவெடுத்தேன் ;

"என்" சொல்வதென்று
தீர்மானித்த காலை
எண்ணிலாக் கேள்விகள்
என்னிடை உதித்தன ;

அங்ஙனம் சிந்திக்கையில்
என் நண்பன்
எதிர் வந்தான் - அவனை
இடை மறித்தேன் - கேள்விக்
கணை தொடுத்தேன் ;

*************************

என் அறிந்தும்
என் தெரிந்தும்
பென்னம் பெருஞ்செயலை
என்னறிவு செய்தாலும்
சின்னஞ் சிறுசெயலை
செய்ய முடியாமல்
தவிக்கையில் நமக்கு
என் அறிவு இருந்தும்
என் என்று
எண்ணத் தோன்றுகிறதே !!

நண்பா !!
இதற்கு நான்
என் செய்வேன் ?!

என் நினைந்தும்
என் முனைந்தும்
எந்நாளும் ஒன்றாகா
கற்பனையும் யதார்த்தமும்
என்றேனும் ஒன்றாகி
பேரின்பம் தருவதில்லையே !!

நண்பா !!
இதற்கு நான்
என் செய்வேன் ?!

என் மெய்கள்
என் பொய்கள்
என்ன நான்
சொன்னாலும் எல்லாமே
ஒருநாளில் இடம்
மாறிச் சிரிக்கின்றதே !!

நண்பா !!
இதற்கு நான்
என் செய்வேன் ?!

என் துடித்தும்
என் நடித்தும்
என்னால் பிறராய்
ஆக முடியவில்லையே
பிறரும் என்னைப்
போல் ஆவதில்லையே !!

நண்பா !!
இதற்கு நான்
என் செய்வேன் ?!

என் முயன்றும்
என் இயன்றும்
என் புகழை
அடைந்தாலும் அதனை
அணைக்கவும் முடியாமல்
விலக்கவும் முடியாமல்
பரிதவித்து நிற்கின்றேனே !!

நண்பா !!
இதற்கு நான்
என் செய்வேன் ?!

என் மிதித்தும்
என் அடித்தும்
என்னிதயம் வந்து
என்னையே உண்ட
அன்பென்ற ஒன்று
எனை பிரிந்து போவதில்லையே !!

நண்பா !!
இதற்கு நான்
என் செய்வேன் ?!

என் நடந்தும்
என் கடந்தும்
காதல் மட்டும்
சாதல் இன்றி
மீண்டும் மீண்டும்
பிறப்பெடுத்து வருகிறதே ?

நண்பா !!
இதற்கு நான்
என் செய்வேன் ?!

என் துணிந்தும்
என் நிமிர்ந்தும்
என் பெருமை
சொல்வது போல்
என் சிறுமை
சொல்ல முடியவில்லையே ??

நண்பா !!
இதற்கு நான்
என் செய்வேன் ?!

என் கொஞ்சினும்
என் கெஞ்சினும்
உன் வழி
செல்லேன் என்றும்
என் வழியே
செல்வேன் என்று
வாழ்க்கை அடம்
பிடித்து நிற்கின்றதே !!

நண்பா !!
இதற்கு நான்
என் செய்வேன் ?!

என் பெருமை
என் அருமை
என் திறமை
என்றே நான்
எந்நாளும் பேசினாலும்
மண்ணோடு மண்ணானால்
என்னோடு இருந்ததெலாம்
என்னோடு இருப்பதில்லையே !!

நண்பா !!
இதற்கு நான்
என் செய்வேன் ?!

என் என்றே
என் என்றே
என்னுள்ளே பல
வகையான "என்" கள் ;
அவற்றுக்கில்லை எண்கள் ;

என்னிடத்தில் இருந்ததெலாம்
உன்னிடத்தில் கொட்டிவிட்டேன்

இனி
நீ என்
செய்வாய் நண்பா ?

கேட்ட கேள்விக்கெல்லாம்
பதில் தெரியவில்லையா ?

அதற்கு
நான் என்
செய்வேன் நண்பா ?!!

1 comment: