Thursday, April 28, 2011

ஐந்தா ? ஆறா ?

காகமே !
சுற்றித் திரியும்
சின்னஞ்சிறிய கரிய
மேகமே !!

நான் உன்
ரசிகன் ;

நீ கறுப்பாக
இருப்பதனால் உன் மேல்
வெறுப்பு காட்டுவோர் உண்டு ;
ஆனால் நான் அப்படியல்ல
உன் மேல் அலகிலாத
விருப்பு கொண்டவன் நான் ;

நான் உன்
ரசிகனாயிருந்தாலும் உனை
நின்று ரசித்ததில்லை ;

ஆதலால்
இன்று ஒருநாள்
மற்ற அலுவல்களையெல்லாம்
ஒதுக்கிவிட்டு உன்னை
நின்று ரசிக்கலாமென்று
முடிவு செய்தேன் ;

எங்கு பார்த்தாலும்
நீ இருந்தாய் - அதனால்
உன்னைக் கண்டுபிடிப்பது
ஒன்றும் கஷ்டமாகயில்லை ;

உன்னை நன்றாக
உற்றுப் பார்த்தேன் ;
உற்றுப் பார்த்ததில்
நிறைய பெற்றுக் கொண்டேன்
நிறைய கற்றும் கொண்டேன்

நாங்களெல்லாம் எப்பொழுதேனும்
வீட்டை விட்டு
வெளியே வருகிறோம் ;
ஆனால் நீயோ
அந்த ’வெளி’யையே
வீடாக வைத்துக் கொண்டிருக்கிறாய் ;

நாங்கள் கட்டணம்
கட்டினால் தான்
மின்விசிறி காற்றளிக்கும் - ஆனால்
உனக்கோ கட்டணம்
ஏதும் இல்லாமல்
ஒரு விசிறியை
அந்த காற்றே அளிக்கிறது ;

எங்களுக்கு வெளிச்சந்தரும்
மின் விளக்குகளை
நாங்கள் அணைக்க வேண்டும் - ஆனால்
உனக்கு வெளிச்சந்தரும்
சூரியனையும் நிலவையும்
நீ அணைக்கத் தேவையே இல்லை ;

நாங்கள் பயணிக்க
இரண்டோ அல்லது
மூன்று சக்கரங்கள்
கொண்ட வாகனங்கள் தேவை ;
உனக்கோ உன்
இரண்டு சிறகுகள்
தான் சக்கரங்கள் ;

கறுப்பாக இருந்தாலும்
உன்மேல் யாரும்
இனவெறி தாக்குதல்
நடத்துவதில்லை - ஆயிரம்
யுகங்கள் ஆகியும்
இந்த பூமியில்
இனவெறித் தாக்குதல்
நடக்காத இடமேயில்லை ;

நீ முற்றும்
கறுப்பாக இருந்தால்
உன்னை அண்டங்காக்கை
என்று எக்களிப்போருண்டு ;

ஆனால் உன்
பெயர்க் காரணத்தை
நான் மட்டுமே அறிவேன் ;

"ஹே மனிதா
அறம் மறந்து
நெறி பிறழ்ந்து - நீ
நிலைகெட்டுத் திரியாதே
உன் அன்னை
பூமியை நீ
காக்கத் தவறாதே"

என்ற கருத்தைத்
தான் நீ
பெயராக வைத்திருக்கிறாய் ;

பெயரில் மட்டுமல்ல..
அந்தக் கருத்தை
உன் இதழிலும் வைத்திருக்கிறாய் ;

அதனால் தான்
போகும் இடமெல்லாம்
"கா கா" என்று
கரைந்து கொண்டே போகிறாய் ;

நீ
"கா கா" என்று
கரைந்தாலும் மனிதர்கள்
யாரும் கரைவதில்லை ;

நீ
"கா கா" என்று
கரைந்தாலும் உன்னை
"போ போ" என்று
விரட்டியவரக்ளே அதிகம் ;

கருத்து தெரிவுக்கும்
செயற்கை ஊடகங்கள்
ஏராளம் உண்டு ;

ஆனால் நீ
கருத்து தெரிவுக்கும்
இயற்கை ஊடகம் ;

உனக்காக செலவிட்ட
ஒரு நாள்
என்னுள் பல
எண்ணங்களைச் சிறகடித்துப்
பறக்கச் செய்திருந்தது ;

உன்னை விட்டுப்
பிரிகையில் எச்சமிடுவதைப்
போல் என்
மனதில் ஒரு
கேள்வியை நீ
தூவிச் சென்றுவிட்டாய் ;

ஐந்தறிவு கொண்ட
நீ இன்புற்றிருக்கிறாய் ;
ஆறறிவு கொண்ட
நான் துன்புற்றிருக்கிறேன் ;

ஆதலால்
நீயே சொல்
ஐந்து பெரிதா ?
ஆறு பெரிதா ?

Monday, April 18, 2011

சாயல்

உண்ட மயக்கத்தால் நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தேன்
அம்மா வந்து எழுப்பினாள்
"டேய் அவா எல்லாம் வந்திருக்காடா
உன்ன பாக்கணும்னு சொல்றா
சீக்கிரம் எழுந்து வா"
தூக்கம் மலர்தல் ஒரு வரம்
தூக்கம் கலைதல் ஒரு சாபம்
ம்ம்... என்ன செய்வது
எனக்கு எழவே பிடிக்கவில்லை
மறுபடியும் மறுபடியும் படுக்கையில் விழவே பிடித்தது
இருப்பினும் அம்மாவாயிற்றே அவள் கட்டளைக்குக் கீழ்ப்பணிந்தேன்
கசங்கிய உடைகளை சரிசெய்த படி
கசக்கிய விழிகளை துடைத்த படி
வந்திருந்த விருந்தினரைப் பார்க்கக் கிளம்பினேன்
ஓரைந்து பேர் வந்திருந்தார்கள்
வந்திருந்தோரின் முகமுன் முகமன் கூறினேன்
என்னைப் பார்த்ததும் அவர்கள் பேச ஆரம்பித்தார்கள்
"ஹே அவன் மூஞ்சி அப்படியே அவன் அப்பாவை உரிச்சு வச்சிருக்கு
அவன் கண்ணு அவன் அம்மா கண்ணு தான்
அவன் கலர் அவன் பாட்டி கலர்
அவன் வழுக்கை கூட ......."
அந்த கடைசி வாசகம் எனக்குப் பிடிக்கவேயில்லை
உடனே அந்த இடத்தை விட்டகன்றேன்
என் முகம் என் அப்பா போன்றதாம்
என் கண் என் அம்மா போன்றதாம்....
அவர்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளட்டும்
எனக்கு அதைப் பற்றியெல்லாம் கவலையில்லை
வந்திருந்தோர்க்குத் தான் ஒரு விஷயம் தெரியவே தெரியாதே
என் உள்ளம் மட்டும் உன் போன்றது என்று !!!

Tuesday, November 16, 2010

உயர்ந்த காதல்

வானக் கடலில்
விரைந்து செல்லும்
ஆகாயக் கப்பலில்
உன்னை விட்டு
நான் மட்டும்
பயணித்துக் கொண்டிருந்தேன் ;
இருக்கையில் சாய்ந்தவாறே
கண்களை மூடிச்
சயனித்துக் கொண்டிருந்தேன் ;

35,000 அடி
உயரத்தில் விமானம்
பறந்து கொண்டிருந்தது ;
உன்னையே நினைத்திருந்ததால்
நீயும் என்னோடு
பறந்து கொண்டிருந்தாய் ;

உயரப் பறக்க
சிறகு வேண்டும்
என்று இதுகாறும்
எண்ணியிருந்தேன் ;

ஆனால்
அந்த வாக்கு
உன்னால் இன்று
பொய்த்து விட்டது
உன் மேல் நான்
வைத்த காதல்
சிறகில்லாமல் பறந்து
அந்த இயற்கையையே
ஜெயித்து விட்டது ;

அந்தக்
காதல் தள்ள
முங்கி முங்கி
எழுந்தேன் உன் நினைவாற்றில் ;
உன்னைப் பற்றி
நினைத்ததால் அபாரமாக
இருந்தது என் நினைவாற்றல் ;

அப்போது - உன்னை
நினைத்துக் கொண்டே
இறுக்கிக் கட்டியிருந்த
அரைக்கச்சை தடவினேன் (அரைக்கச்சு - Belt )

நீ அறியாமல்
உன் பின்னிருந்து
உன் இடையை
இறுக்கி அணைத்த
கணங்கள் என்
ஞாபகத்திற்கு வந்தன ;

சற்று நிமிர்ந்து
ஜன்னலை நோக்கினேன் ;

மேகங்களை உரசி
விமானம் பறக்கையில் - உன்
பாகங்களை உரசி
புணர்ந்த நிமிடங்கள்
ஞாபகத்திற்கு வந்தன ;

அவ்வமயம்
திடீரென்று "டர்புலன்ஸ்"
காரணமாக விமானம்
ஆட்டம் கண்டது ;

அவ்வப்போது
ஆடியும் அசைந்தும்
ஆளைக் கொல்லும் - உன்
கொழுத்த தனங்கள்
ஞாபகத்திற்கு வந்தன ;

இவ்வாறு உன்
நினைவுப் படுக்கையில்
படுத்திருந்த போது
சற்று மூச்சுத்திணறல்
ஏற்பட்டது ;

ஏனென்று ஆய்ந்தேன் ;

"விமானம் மிகுந்த
உயரத்தில் பறக்கிறது"
என்ற சேதி - என்
காதினில் விழுந்தது ;

உடனே ஆக்ஸிஜன்
முகமூடிகள் மேலிருந்து
இறங்க

விமானி விமானத்தைச்
சற்று தாழ்வாக
இறக்க

எல்லோரும் "ஃவூ"
என்று பெருமூச்செறிந்து
இளைப்பாறலாம் என்று
நினைக்கையில்

விமானியின் பிழையோ,
இன்ஜின் பழுதோ,
வானிலை மாற்றமோ....

என்னவென்று தெரியவில்லை
விமானம் திடீரென்று
வசமிழந்தது - வசமிழந்து
கன்னா பின்னாவென்று
சுழன்றது ;

என்ன செய்தும்
சுழற்சி அடங்கவில்லை ;
சுழற்சி அடங்காவிடினும் - விமானிகளின்
முயற்சி அடங்கவில்லை ;

எனக்கு நிலைமை
புரிந்து விட்டது

கண் முன்னே
செயற்கை ஆக்ஸிஜன்
முகமூடிகள் தொங்கின ;

ஆனால் நானோ
என் இயற்கை
ஆக்ஸிஜனாகிய உன்னை
நினைத்துக் கொண்டேன் ;

இது தான்
தருணம் என்று
என் மூச்சைப்
பலமுறை உள்ளிழுத்து
சுவாசித்துக் கொண்டேன் ;

உன்னை எத்துணை
முடியுமோ அத்துணை
சேகரித்துக் கொண்டேன் ;

விமானம் இறங்கிக்
கொண்டே இருந்தது ;
உன் சேகரிப்புகள்
ஏறிக் கொண்டேயிருந்தன ;

எல்லோருக்கும் மரணந்தான்
அதில் சந்தேகமில்லை ;

மற்றவர்களுக்கெல்லாம் அது மண்ணோடு ;
எனக்கு மட்டும் அது உன்னோடு ;

Tuesday, June 29, 2010

ஒரு வண்ணக்கதை

வானம் தாராளமாக
விரிந்திருந்தது ;
மேகம் மழைநீரைச்
சொரிந்திருந்தது ;
சூரியன் நெருப்பால்
எரிந்திருந்தது ;
காற்று குளிரோடு
திரிந்திருந்தது - அந்த
நேரத்தில் தன்மேல்
இருந்தவர்கள் மிகவும்
குறைவு என்பது
நிலத்திற்கு நன்றாகத்
தெரிந்திருந்தது ;

அப்போது
ஐந்து பூதங்களின்
முன்னிலையில்
ஆறு போல் அழகாக
வளைந்து
ஏழு வண்ணங்களால்
கூடி
எட்டாத உயரத்தில்
வானவில் வசீகரமாக
வீற்றிருந்தது ;

வானவில்லை யாரும்
பார்க்கவில்லை - இருப்பினும்
வானவில் அதற்காகக்
கவலைப்படவில்லை ;

"இங்கே ஏன்
வந்தாய் ?" என்று
வானமும் கேட்கவில்லை ;

"நான் வந்தே
தீருவேன்" என்று
வானவில் முழங்கவுமில்லை ;

இந்திரவில்லே !
நீ எங்கிருந்து வருகிறாய் ?

உன் ஆயுள்
சில நேரந்தான் - ஆயினும்
நீ கவலையே
படாமல் சந்தோஶமாக
வாழ்ந்து விடுகிறாய் ;

மனிதனின் ஆயுள்
பல காலந்தான் - ஆனால்
அவனால் இந்த
உலகத்தில் சந்தோஶமாக
வாழ முடியவில்லை ;

மனிதனுக்கும் உனக்கும்
ஒரே வித்தியாசந்தான்
உனக்கு வண்ணங்கள்
அவனுக்கு எண்ணங்கள் ;

உன் வண்ணங்களின்
எண்ணங்களை மட்டுமல்ல
தன் எண்ணங்களின்
வண்ணங்களையும் மனிதன்
புரிந்து கொள்வதில்லை ;

ஏழு வண்ணங்களிருந்தும் - நீ
ஏழையாய் இருப்பதில்லை ;
அந்த வானமே
உனக்குத் தானே ?!

நீ
தனியாக நிற்பதில்லை
தனித்து நிற்கிறாய் ;
தனித்து நிற்பதனால்
தன்னிறைவோடு இருக்கிறாய் ;

நீ
உனக்காக வாழ்கிறாய் ;
உள்ளொளியோடு திகழ்கிறாய் ;

மனிதன்
பிறர்க்காக வாழ்கிறான் ;
தலைகனத்தோடு திரிகிறான் ;

"நான்" என்ற
எண்ணம் உனக்குக்
கிஞ்சித்தும் இருப்பதில்லை ;

ஆதலால் நீ
வானவில் மட்டுமல்ல
ஞானவில்லும் கூட ;

உன்னைப் பற்றி
இத்துணை எழுதியும்
திருப்தி அடையாமல்
நான் யோசித்துக்
கொண்டே இருந்தேன் ;

ஆனால் நீ
எனக்காகக் காத்திராமல்
மெல்ல மெல்ல
மறைந்து கொண்டிருந்தாய் ;

Thursday, June 10, 2010

காதலும் கல்யாணமும்

காதல் கல்யாணத்தின்
கரத்தைப் பிடிக்கிறது
கல்யாணமோ காதலின்
கழுத்தைப் பிடிக்கிறது

என் செய்வது ?

கழுத்தைப் பிடிப்பதே
எல்லாருக்கும் பிடிக்கிறது ;

காதலோ
கல்யாணத்தின் பிடியிலிருந்து
நழுவ முடியாமல்
குற்றுயிரும் குலையுயிருமாய்
கண்ணீர் வடிக்கிறது ;

காதலின் கண்ணீரை
யார் துடைப்பார் ?
கல்யாணத்தின் கரத்தை
யார் உடைப்பார் ?

Sunday, May 9, 2010

பொருளின் பொருள்

நிம்மதியாக வாழ்வதற்கு
மிகப்பெரிய வீடு

வெப்பத்தைத் தணிப்பதற்கு
அறைகளில் குளுமி*

பரவசத்தோடு படிப்பதற்கு
பக்தி இதழ்கள்

அவசரத் தேவைக்கு
பக்கத்தில் ஏ.டி.எம்

வசதியாகக் குளிப்பதற்கு
வெந்நீர் குழாயும்
தண்ணீர் குழாயும்

ருசிக்காக சமைக்காமல்
பசிக்காக சமைக்கும்
ஒரு சமையற்காரி

காதோடு வைத்து
களிப்புற சின்னஞ்சிறிய
வானொலிப் பெட்டி

பொழுதைப் போக்குவதற்கு
செட்டாப் பாக்ஸுடன்
கூடிய தொலைக்காட்சி

நினைத்ததை எல்லாம்
பகிர்ந்து கொள்ள
உயிரோடிருக்கும் தொலைபேசி

தகவல்களைக் கண்டறிய
இணையத்தின் தொடர்பு
கொண்ட கணிப்பொறி

ம்...

போதும் வேறொன்றும்
தேவையில்லை ;

குழந்தைகளைப் பிரிந்து
வாழும் வயதான
பெற்றோர்க்கு வேறு
துணை வேண்டாம் ;

குளுமி - ஆங்கிலத்தில் ஏ.ஸி

Wednesday, May 5, 2010

தைரியம்

தலைகீழாகச் செல்லும்
போதும் சாவைப்
பற்றி கவலைப்
படாமல் இருக்கின்றன
மிதிவண்டியில் செல்லும்
கோழிகள் ;