Sunday, February 19, 2012

வெயிலும் குளிரும்


உச்சி வெயில்
உச்சியைப் பிளந்தது ;
செய்வதறியாது திகைத்தேன் - கொடுஞ்சூட்டால்
எரிந்து புகைத்தேன் ;

அப்போது
பசுமாடு ஒன்று
"...மா" என்றது ;
அதற்குப் போட்டியாக
அதனருகே குட்டிப்போட்ட
ஆடொன்று முட்டிப்போட்டு
"மே...." என்றது ;
திடீரென்று எங்கிருந்தோ
வந்த காகமொன்று
ஆட்டின் தோளுரசி
"கா கா" என்றது ;
அதைக் கேட்ட
ஆலங்குயில் ஒன்று
"கூ கூ" என்றது ;
உடனே நெடுந்தூரத்தில்
பறந்த கிளிக்கூட்டமொன்று
"கீ கீ" என்றது ;
இதையெல்லாம் வெறித்துப்
பார்த்திருந்த தெருநாயொன்று
"..ள் ..ள்" என்றது ;

ஓ ! ஒண்டமிழே !!
நீ உன்னை
எவ்வாறு இந்த
ஜீவராசிகளுக்குக் கற்றுக் கொடுத்தாய் ?

ம்ம்....

வியற்றமிழே !!
வெயிலால் வெந்தவன் - இன்று
உன்னால் குளிர்ந்தேன்
உள்மனம் மலர்ந்தேன் ;

Sunday, February 5, 2012

பெல்லி மகள்

இதோ உங்களுக்காக
என் சுயசரிதை
சொல்கிறேன் ;

தயை கூர்ந்து
கேளுங்கள் ;

சில பக்கங்கள்
தான் - ஆதலின்
சற்றே பொறுத்துக்
கொள்ளுங்கள் ;
என்
ஆடை சற்று
சரிந்தாலே என்
சுயம் தெரியும் - எனக்கு
செயம் பெருகும் ;

எனவே இந்தச்
சுயசரிதையின் தலைப்பு
"சுயசரிதை" தான் ;

என் நாடு
உலக வரைபடத்தின்
நடுவில் இருக்கும் ;

அதனால் தான்
என் பிழைப்பும்
நடுவில் இருக்கிறதோ
என்னவோ ?

ஆம் ,
"வயிற்றுப்" பிழைப்பே - என்
வயிற்றுப் பிழைப்பு ;

பிறர்க்கு வாழ்க்கை
ஓடிக் கொண்டே இருக்கும் ;
எனக்கு வாழ்க்கை
ஆடிக் கொண்டே இருக்கும் ;

இந்தக் கலைக்குப்
பின்னால் எத்தனை
கொலைகள் ?
மண்நோக்கி விழுந்தாலும்
மகிழ்வோடு விழுமே
ஒரு நீர்த்துளி

அதைப் போல்
கொன்றேன் என்
அச்சத்தை அச்சமில்லாமல் ;

வண்டு குடைந்தாலும்
வாவென்று அணைக்குமே
ஒரு பூ

அதைப் போல்
கொன்றேன் என்
வெட்கத்தை வெட்கமில்லாமல் ;

கடலில் இறங்கினாலும்
கலக்கமின்றி செல்லுமே
ஒரு படகு

அதைப் போல்
கொன்றேன் என்
தயக்கத்தைத் தயக்கமில்லாமல் ;

இம்மூன்றையும் கொன்று
என்னையே தந்தேன்
பெல்லி கலைத்தாயிடம் ;

அவள்
ஏற்றாள் கொலையை - எனக்கு
கொடுத்தாள் கலையை ;

அக்கலையை வளர்த்தேன் - ஆனால்
உடம்பை வளர்க்கவில்லை ;

உடம்பை வளர்த்தால் - என்
கலையின் வளர்ச்சியேது ?

வளர்த்த கலையை
உலகுக்குக் காண்பிக்க
ஒருநாள் மேடையேறினேன் ;

விரித்து விட்ட கூந்தல் ,
வளையம் அணிந்த தொப்புள்,
தொடை தெரிந்த பாவாடை

இவற்றினோடு நின்றேன்
சபையோர் முன் ;

டர்புக்காவை ஒருவன்
வாசிக்கத் தொடங்குகையில்
எனை மறந்து ஆடினேன் ;

வேறெதையும் ஆட்டாமல்
இடுப்பையே ஆட்டினேன் ;

என்னுடலில் ஓரலை
எழுந்து அடங்கியது ;

அலை வரிசையாய் திரண்ட கூட்டம்
அலை வரிசையாய் எழுந்ததை
அலை பாயாமல் பார்த்தது ;
அப்போது தான் புரிந்தது
என் அலைவரிசையும்
அவர்கள் அலைவரிசையும்
ஒன்று தானென்று ;

நான் விடவில்லை,
இன்னும் வளைந்து
நெளிந்து ஆடினேன் ;

என்
இடுப்பாடியது - இடுப்பிருக்கும்
வயிறாடியது - வயிறிருக்கும்
தொப்புள் ஆடியது ;
தொப்புள் உள்ளிருக்கும்
செல்லாடியது - செல்லிருக்கும்
திசுவாடியது - திசுவிருக்கும்
தசையாடியது - தசையிருக்கும்
நாராடியது ;

"அசை" என்றால் நகராமல் அசைந்தது !!
"நகர்" என்றால் அசையாமல் நகர்ந்தது !!

மொத்தத்தில் சபையோடு
நாட்டியம் விளையாடியது ;

அன்று முதல் என்னிடுப்பை
கண்களால் மொய்த்தவரும்
இதழ்களால் தைத்தவரும்
ஏராளம் ஏராளம் !!

நல்ல வேளை
ஒரு மாறுதலுக்காக
எல்லாரும் என்
இடையையே பார்த்தனர் - சற்று
மேலே பார்க்காமல் !!

அன்று முதல்
ஆடுகிறேன் ஆடுகிறேன்
ஆடிக் கொண்டே இருக்கிறேன்

சனத்தை நினைத்து - விமர்
சனத்தை மறந்து ;

வயதிருக்கும் வரை ஆடுவேன் ;
வயது போனால் ?

அப்போது பார்த்துக்
கொள்ளலாம் ;

இப்போதைக்கு இது
போதும் ;

சுபம் ;

Wednesday, February 1, 2012

மனைமாட்சி


எத்தனையோ பார்த்ததுண்டு
எங்கெல்லாமோ போனதுண்டு
ஆனால்
இவ்விடத்தைப் போல் - வேறு
எவ்விடத்தையும் கண்டதில்லை ;

இது
எல்லோரும் விரும்பும் இடம் ;
எல்லோரும் திரும்பும் இடம் ;

அது வேறேதுமல்ல ;

முனை தோறும்
முளைத்த மருத்துவ
மனை தானது ;
ஒரு வகையில்
நமக்கு எல்லாம்
அனை தானது ;

கட்டிலில் இருவர்
விழுந்ததால் நாம்
தொட்டிலில் விழுந்தோம் ;

அது பிடிக்காமல்
அதனின்றும் விழுந்தோம் ;

பின் தவழ்ந்து
மறுபடியும் கட்டிலிலேயே
விழுகிறோம் ;

இடையில் எத்தனை
ஆட்டம் ?

கடலில் ஆடும்
கப்பல் ஆட்டம் ;

ஒரு சின்ன
ஓட்டை போதாதா
நம்மை விழுங்க !!

எத்தனை பேர்
இங்கே கரை கண்டார் ?
கரையைக் காணாது
இருப்பதில் தானே
கரை கண்டார் !!

மொத்தத்தில் கட்டிலிலும்
தொட்டிலிலும் விழுகின்ற
விட்டில்கள் நாம் ;

குழந்தையாய்ப் பிறக்கிறோம் ;
குழந்தையாய் இறக்கிறோம் ;

எல்லாம் இந்த
மனையில் தானே ?

பிறக்கும் போது
இருந்த உடைகள்
தானே நமக்கு
இறக்கும் போதும் ;

குழந்தையாய்ப் பிறக்கையில்
முகம் களிப்பார் ;
குழந்தையாய் இறக்கையில்
முகம் சுளிப்பார் ;

பிறவி எடுத்த
பின்னே எல்லோரும்
"கரு" வி ஆகிறோம் - அந்த
கருவத்தைக் கல்லுவது
இந்த மனைவாழ்
கருவிகள் தானே ?

நம் ஆரம்பம் பிள்ளைத்தாய் ;
நம் அஸ்தமனம் வெள்ளைத்தாய் ;

மனிதனைக் காக்க
பணம் வேண்டும்
என்று சொன்ன
இம்மனை ஒரு
செம்மனை தானே ?

இங்கே என்ன இல்லை ?
இங்கே ஏது எல்லை ?

ஆனந்தமும் இங்கே
அவஸ்தையும் இங்கே ;

முதலும் இங்கே ,
முடிவும் இங்கே ;

முட்டி மோதினால்
இவை இரண்டு
தானே வாழ்க்கையில் ;

ஆதலால் இந்த
மனையை விட்டு
எங்கே போவது ?

நமக்கும் அதற்கும்
தீராத உறவு - என்றும்
மாறாத உறவு ;

இவ்வாறெல்லாம் சிந்தித்துக்
கொண்டே தெருவில்
நடந்து போய்க்
கொண்டிருந்தேன் ;

ஒரு மருத்துவமனை
வந்தது ;

என்
முறை வந்தால்
தவறாமல் அழை
என்று சொல்லி
விட்டு வந்தேன் ;

Friday, January 13, 2012

உனக்கும் எனக்கும்


உறக்கம் உன்னைத் தொட்டுவிட்டால்
உடனே உறங்கப் போகாதே - நீ
உறங்கப் போகும் முன்னாலே - உன்
உருள்விழி இரண்டும் மயங்கிடுமே - அம்
மயக்கம் வேண்டும் எனக்கு - இதில்
தயக்கம் உண்டோ உனக்கு ?

சோகம் உன்னைச் சுட்டுவிட்டால் - கண்
சோனை நீரைத் துடைக்காதே
மேகம் போலே நீயழுதால் - உன்
முகமும் அழகாய்ச் சுருங்கிடுமே - அச்
சுருக்கம் வேண்டும் எனக்கு - தனி
வருக்கம் சுருக்கம் உனக்கு ?

தூசி கண்ணில் விழுந்துவிட்டால்
தோழியை கடிதே அழையாதே - உன்
நாசி செய்யும் முகபாவம்
நன்றாய் உடனே மலர்ந்திடுமே - அப்
"பா" வம் வேண்டும் எனக்கு - இதில்
பாவம் உண்டோ உனக்கு ?

நகமும் கையில் வளர்ந்துவிட்டால்
நங்காய் அதை நீ நறுக்காதே
சுகமாய் நீண்ட நகக்கண்ணில்
சரமாய் காமம் ஒளிந்திடுமே - அக்
காமம் வேண்டும் எனக்கு - அது
சேமம் தானே உனக்கு ?

குளித்து முடித்து வருகையிலே
குயிலாய் ஆடை அணியாதே - நீ
ஒளித்து வைத்த அழகினிலே - ஒரு
குழந்தை எனக்குத் தெரிந்திடுமே - அக்
குழந்தை வேண்டும் எனக்கு - இதில்
குழப்பம் உண்டோ உனக்கு ?
(குழந்தையும் நிர்வாணமாகத் தானே இருக்கும். அது தான் இந்தப் பாடலில் குறிப்பிடுகிறேன். வேறெதுவும் அல்ல )

நெற்றிப் பரப்பில் எப்போதும்
நீ திலகமிட்டுக் கொள்ளாதே - தனைச்
சுற்றி எதுவும் இல்லாமல் - உன்
நெற்றி நிர்வாணம் ஆகிடுமே - அந்த
நிர்வாணம் வேண்டும் உனக்கு - அதன்
நிர்மாணம் வேண்டும் எனக்கு ;

கழுத்தைச் சுற்றி எந்நாளும் - சிறு
கனகம் அணிந்து திரியாதே
அழுத்தம் இல்லாக் கழுத்தினிலே - உணவு
அருந்தும் அழகு தெரிந்திடுமே - அவ்
அழகே வேண்டும் எனக்கு
அதுவே பொறுப்பு உனக்கு

மாதே உந்தன் காதுகளில்
மறந்தும் துளைகள் போடாதே
காதில் துளையும் அற்றிருந்தால்
உன்னழகும் மிச்சம் ஆகிடுமே - அம்
மிச்சம் வேண்டும் எனக்கு - இதில்
ஒச்சம் உண்டோ உனக்கு ?

எத்தனை உனக்குள் இருக்கிறதோ
அத்தனை எனக்குள் சுரக்கிறதோ ? - இப்
பித்தனை சற்றே மனமிரங்கி நீ
பொறுத்தருளாது போனாலும் அடி
இன்னும் வேண்டும் எனக்கு
இதுவே தொல்லை உனக்கு







Wednesday, January 11, 2012

நின்று போன வண்டி


இன்று ரோட்டில்
என் பக்கத்தில் - ஒரு
முக்காடு அணிந்த
பூக்காடு போனது - கண்
வேக்காடு ஆனது - கொடும்
சாக்காடு ஆனது ; இனி
எக்காடு சென்றாலும்
இக்காடு கிடைக்குமா ?

திக்கெட்டும் பறந்த
முக்காடால் நான்
திக்கு முக்காடிப் போனேன் ;

வீசிய காற்றில்
முக்காடும் திறக்கவில்லை ;
முழுமுகமும் தெரியவில்லை - அந்த
முக்காடால் என்நெஞ்சம்
முட்காடாய் ஆனது ;

நான் விடவில்லை
அவளருகில் சென்றேன் ;
Coolers அணிந்திருந்தாள் ;
அவளையே பிடித்திருந்தாலும்
அது ஒன்று தான்
அவளிடம் பிடிக்கவில்லை ;

பாதை வளர்ந்தது ;
சற்று நேரத்தில்
சிக்னல் விழுந்தது ;

சிவப்பு சிக்னலை
எனக்கு இன்று
தான் மிகவும்
பிடித்திருந்தது ;

சிக்னல் மாறியதும்
அந்தப் பூ
விருட்டென்று பறந்தது ;

அவள் வண்டி சென்று விட்டது ;
என் வண்டி நின்று விட்டது ;

என் செய்ய ?

அப்படியே நின்றுவிட்டால்
மேலாளர் திட்டுவாரென
வண்டியைக் கிளப்பி
அலுவலகம் வந்துவிட்டேன் ;


Friday, November 11, 2011

லகரத்தில் ழகரத்தில் ளகரத்தில் காதல்


காலையில் பிறந்து காளையை எழுப்பி
வாலையாம் குமாரி வாளையே சுழற்றி
வேலையைக் கொடுக்க வேளையை மறந்து
தாளையே அடைத்து தாளையே கொணர்ந்து
மூலையில் அமர்ந்து மூளையைக் கசக்கி
கோலையே எடுத்து கோழையாய் இராமல்
எழுதினேன் அவளை "ல" விலே "ழ" விலே "ள" விலே

ஒலியே கண்ணின் ஒளியே
வலியே கொஞ்சும் வளியே
கலியே வாழ்வின் களியே

கலவே நினைவுக் களவே
பலவே ஜொலிக்கும் "பள"வே( பள = பளபளப்பே என்ற பொருளில்)
உளவே முத்த உழவே

கள்ளே வைரக் கல்லே
புள்ளே தங்கப் புல்லே
அள்ளே தனித்த அல்லே

(அள் = அள்ளப்படுவது , செறிவு, வன்மை, கூர்மை)

வெள்ளமே அச்சு வெல்லமே
பள்ளமே தைக்கும் பல்லமே (பல்லம் - அம்பு)
பலமே இனிப்பு பழமே
தலமே இயங்கு தளமே
உளமே மிகுந்த உலமே (உலம் - திரட்சி , வலிமை)

ஆளியே பாயும் ஆழியே
காளியே மேயும் காலியே
சோலியே சிரிப்புச் சோழியே
கோலியே கொத்தும் கோழியே

உலைப்பே பிரம்மன் உழைப்பே
அலைப்பே "அந்த" அழைப்பே
மழைப்பே எந்தன் மலைப்பே
தழைப்பே கவிதைத் தலைப்பே
களைப்பே கவனக் கலைப்பே
முலைப்பே நெஞ்சு முளைப்பே
சுளிப்பே உதட்டுச் சுழிப்பே
களிப்பே நேரக் கழிப்பே
விழைப்பே இன்ப விளைப்பே
இளைப்பே தங்க இழைப்பே

வள்ளியே மோக வல்லியே
வில்லியே இதய விள்ளியே
எல்லியே எந்தன் எள்ளியே (எல்லி - இரவு , என்னை எள்ளி நகையாடுபவளே என்ற பொருளில் எழுதினேன்)
புல்லியே மையப் புள்ளியே ( புல்லி - பூவிதழ் , புல்லுதல் = காமம் கொள்ளுதல்)
அல்லியே நெஞ்சு அள்ளியே (அள்ளி - வெண்ணெய் அல்லது என்னை அள்ளுபவளே என்றும் கொள்ளலாம்)
கல்லியே திருடு கள்ளியே (கல்லி - குருவி)

உள்ளவே உனை உள்ளவே
உள்ளவே இன்னும் உள்ளவே
என உள்ளவே நான் செல்லவே
உள்ளமே அது வீழ்ந்திட

இல்லையே ஒன்றும் இல்லையே - இதற்கு
மேல் சொல்வதற்கு ஒன்றும் இல்லையே
இல்லையே என்றும் இல்லையே - உன்
அழகுக்கு என்றுமில்லை எல்லையே




Monday, November 7, 2011

நீயும் மழையும் 2


அடைமழை பெய்தது
ஒதுங்கி நின்றேன் ;

கனமழை பெய்தது ;
கப்சிப் என்றிருந்தேன்

இடிமழை பெய்தது
இடிந்து போனேன் ;

புயல்மழை பெய்தது
அடங்கிப் போனேன் ;

இந்த மழைகள்
அனைத்தையும் உன்னழகில்
ஒருங்கே கண்டேன் ;

எனக்கு எதுவுமே
செய்யத் தோன்றவில்லை ;