Friday, November 11, 2011

லகரத்தில் ழகரத்தில் ளகரத்தில் காதல்


காலையில் பிறந்து காளையை எழுப்பி
வாலையாம் குமாரி வாளையே சுழற்றி
வேலையைக் கொடுக்க வேளையை மறந்து
தாளையே அடைத்து தாளையே கொணர்ந்து
மூலையில் அமர்ந்து மூளையைக் கசக்கி
கோலையே எடுத்து கோழையாய் இராமல்
எழுதினேன் அவளை "ல" விலே "ழ" விலே "ள" விலே

ஒலியே கண்ணின் ஒளியே
வலியே கொஞ்சும் வளியே
கலியே வாழ்வின் களியே

கலவே நினைவுக் களவே
பலவே ஜொலிக்கும் "பள"வே( பள = பளபளப்பே என்ற பொருளில்)
உளவே முத்த உழவே

கள்ளே வைரக் கல்லே
புள்ளே தங்கப் புல்லே
அள்ளே தனித்த அல்லே

(அள் = அள்ளப்படுவது , செறிவு, வன்மை, கூர்மை)

வெள்ளமே அச்சு வெல்லமே
பள்ளமே தைக்கும் பல்லமே (பல்லம் - அம்பு)
பலமே இனிப்பு பழமே
தலமே இயங்கு தளமே
உளமே மிகுந்த உலமே (உலம் - திரட்சி , வலிமை)

ஆளியே பாயும் ஆழியே
காளியே மேயும் காலியே
சோலியே சிரிப்புச் சோழியே
கோலியே கொத்தும் கோழியே

உலைப்பே பிரம்மன் உழைப்பே
அலைப்பே "அந்த" அழைப்பே
மழைப்பே எந்தன் மலைப்பே
தழைப்பே கவிதைத் தலைப்பே
களைப்பே கவனக் கலைப்பே
முலைப்பே நெஞ்சு முளைப்பே
சுளிப்பே உதட்டுச் சுழிப்பே
களிப்பே நேரக் கழிப்பே
விழைப்பே இன்ப விளைப்பே
இளைப்பே தங்க இழைப்பே

வள்ளியே மோக வல்லியே
வில்லியே இதய விள்ளியே
எல்லியே எந்தன் எள்ளியே (எல்லி - இரவு , என்னை எள்ளி நகையாடுபவளே என்ற பொருளில் எழுதினேன்)
புல்லியே மையப் புள்ளியே ( புல்லி - பூவிதழ் , புல்லுதல் = காமம் கொள்ளுதல்)
அல்லியே நெஞ்சு அள்ளியே (அள்ளி - வெண்ணெய் அல்லது என்னை அள்ளுபவளே என்றும் கொள்ளலாம்)
கல்லியே திருடு கள்ளியே (கல்லி - குருவி)

உள்ளவே உனை உள்ளவே
உள்ளவே இன்னும் உள்ளவே
என உள்ளவே நான் செல்லவே
உள்ளமே அது வீழ்ந்திட

இல்லையே ஒன்றும் இல்லையே - இதற்கு
மேல் சொல்வதற்கு ஒன்றும் இல்லையே
இல்லையே என்றும் இல்லையே - உன்
அழகுக்கு என்றுமில்லை எல்லையே




Monday, November 7, 2011

நீயும் மழையும் 2


அடைமழை பெய்தது
ஒதுங்கி நின்றேன் ;

கனமழை பெய்தது ;
கப்சிப் என்றிருந்தேன்

இடிமழை பெய்தது
இடிந்து போனேன் ;

புயல்மழை பெய்தது
அடங்கிப் போனேன் ;

இந்த மழைகள்
அனைத்தையும் உன்னழகில்
ஒருங்கே கண்டேன் ;

எனக்கு எதுவுமே
செய்யத் தோன்றவில்லை ;

Tuesday, September 6, 2011

என் செய்வேன் - கவியரங்கத்தில் பாடியது


தமிழ் வணக்கம்

என்னுள் தனை
வைத்ததா அன்றி
தன்னுள் எனை
வைத்ததா என்று
அய்யுறும் வண்ணம்
என் ஊனாகி
என் உயிராகி
என்னுளத்த மர்ந்து
எனையாட்சி செய்யும்
என் அனை தமிழே - நீ
எனை அணை தமிழே !!

அவை வணக்கம்

என்பால் உள்ள
அளப்பரும் அன்பால்
என் கவி புகழ்ந்து
என் பிழை திருத்தி
என் தோள் தட்டி
எனை நல்வழிப்படுத்தும்
எந்தை நிகர் கவிஞர்காள் !!
எண்ணரும் அறிஞர்காள் !!

நான்
என்னோற்றேன் தங்கள்
ஆசி பெறுதற்கு ?!

உங்கள் காலடி
மலர் வணங்கி

அடியேன் சமைத்ததை
அவைக்கண் வைக்கின்றேன்
சுவை பொறுத்தருளுக ;

*******************

கவிதைத் தலைப்பு
என்னென்றேன் தலைவரிடம் ;
கவிதைத் தலைப்பு
"என்" என்றார் தலைவர் - அது
என்னென்று எனக்குத்
தெரியவில்லை - என்
செய்வதென்று புரியவுமில்லை ;

என் சொல்வதென்று
சின்னேரம் யோசித்தேன் ;
கடைசியில் "என்"
சொல்வதென்று முடிவெடுத்தேன் ;

"என்" சொல்வதென்று
தீர்மானித்த காலை
எண்ணிலாக் கேள்விகள்
என்னிடை உதித்தன ;

அங்ஙனம் சிந்திக்கையில்
என் நண்பன்
எதிர் வந்தான் - அவனை
இடை மறித்தேன் - கேள்விக்
கணை தொடுத்தேன் ;

*************************

என் அறிந்தும்
என் தெரிந்தும்
பென்னம் பெருஞ்செயலை
என்னறிவு செய்தாலும்
சின்னஞ் சிறுசெயலை
செய்ய முடியாமல்
தவிக்கையில் நமக்கு
என் அறிவு இருந்தும்
என் என்று
எண்ணத் தோன்றுகிறதே !!

நண்பா !!
இதற்கு நான்
என் செய்வேன் ?!

என் நினைந்தும்
என் முனைந்தும்
எந்நாளும் ஒன்றாகா
கற்பனையும் யதார்த்தமும்
என்றேனும் ஒன்றாகி
பேரின்பம் தருவதில்லையே !!

நண்பா !!
இதற்கு நான்
என் செய்வேன் ?!

என் மெய்கள்
என் பொய்கள்
என்ன நான்
சொன்னாலும் எல்லாமே
ஒருநாளில் இடம்
மாறிச் சிரிக்கின்றதே !!

நண்பா !!
இதற்கு நான்
என் செய்வேன் ?!

என் துடித்தும்
என் நடித்தும்
என்னால் பிறராய்
ஆக முடியவில்லையே
பிறரும் என்னைப்
போல் ஆவதில்லையே !!

நண்பா !!
இதற்கு நான்
என் செய்வேன் ?!

என் முயன்றும்
என் இயன்றும்
என் புகழை
அடைந்தாலும் அதனை
அணைக்கவும் முடியாமல்
விலக்கவும் முடியாமல்
பரிதவித்து நிற்கின்றேனே !!

நண்பா !!
இதற்கு நான்
என் செய்வேன் ?!

என் மிதித்தும்
என் அடித்தும்
என்னிதயம் வந்து
என்னையே உண்ட
அன்பென்ற ஒன்று
எனை பிரிந்து போவதில்லையே !!

நண்பா !!
இதற்கு நான்
என் செய்வேன் ?!

என் நடந்தும்
என் கடந்தும்
காதல் மட்டும்
சாதல் இன்றி
மீண்டும் மீண்டும்
பிறப்பெடுத்து வருகிறதே ?

நண்பா !!
இதற்கு நான்
என் செய்வேன் ?!

என் துணிந்தும்
என் நிமிர்ந்தும்
என் பெருமை
சொல்வது போல்
என் சிறுமை
சொல்ல முடியவில்லையே ??

நண்பா !!
இதற்கு நான்
என் செய்வேன் ?!

என் கொஞ்சினும்
என் கெஞ்சினும்
உன் வழி
செல்லேன் என்றும்
என் வழியே
செல்வேன் என்று
வாழ்க்கை அடம்
பிடித்து நிற்கின்றதே !!

நண்பா !!
இதற்கு நான்
என் செய்வேன் ?!

என் பெருமை
என் அருமை
என் திறமை
என்றே நான்
எந்நாளும் பேசினாலும்
மண்ணோடு மண்ணானால்
என்னோடு இருந்ததெலாம்
என்னோடு இருப்பதில்லையே !!

நண்பா !!
இதற்கு நான்
என் செய்வேன் ?!

என் என்றே
என் என்றே
என்னுள்ளே பல
வகையான "என்" கள் ;
அவற்றுக்கில்லை எண்கள் ;

என்னிடத்தில் இருந்ததெலாம்
உன்னிடத்தில் கொட்டிவிட்டேன்

இனி
நீ என்
செய்வாய் நண்பா ?

கேட்ட கேள்விக்கெல்லாம்
பதில் தெரியவில்லையா ?

அதற்கு
நான் என்
செய்வேன் நண்பா ?!!

Wednesday, August 10, 2011

மங்காத்தா - நீ நான்


பல்லவி

ஆண் :

கண்ணாடி நீ கண் ஜாடை நான்
என் வீடு நீ உன் ஜன்னல் நான்
என் தேடல் நீ உன் தேவை நான்
என் பாடல் நீ உன் வார்த்தை நான்
என் பாதி நீ உன் பாதி நான்
என் ஜீவன் நீ உன் தேகம் நான்
என் கண்கள் நீ உன் வண்ணம் நான்
என் உள்ளம் நீ உன் எண்ணம் நான்

பெண் :

கண்ணோடு வா நீ ஏ ஏ
மோகத் தாளம் போடு நீ ஏ ஏ
ராஜா இன்று வானோடு மேகங்கள் தீண்டாமல் தொட்டுச் செல்ல

என் மேனி நீ உன் ஆடை நான்
என் பேச்சு நீ உன் மேடை நான்
என் பாதை நீ உன் பாதம் நான்
என் தென்றல் நீ உன் வாசம் நான்

சரணம் - 1

ஆண் :

என்னை நீயென்று உணர்ந்து கொண்டேன்
உன்னை என்னோடு தொடர்ந்து நான் கண்டேன்

பெண் :

ஏதோ ஏதேதோ நடந்து நான் நின்றேன்
வானம் மேலே தான் பறந்து நான் சென்றேன்

ஆண் :

உன் கண்கள் ஓயாமல் என்னெஞ்சைத் தீயில் தள்ள

சரணம் - 2

பெண் :

தூரம் எல்லாமே உடைந்து போக
பாரம் எல்லாமே வளர்ந்து நோயாக

ஆண் :

வீரம் கொண்டாடும் கலைஞனாக
ஈரம் மண் மேலே விழுந்து தீயாக

பெண் :

தீராத போரொன்று நீ தந்து என்னை வெல்ல

Friday, July 1, 2011

மூடு பனி


ஊரெல்லாம் பற்றி எரிகிறது
பனி மூட்டம்




Thursday, June 16, 2011

மெய்யும் பொய்யும்

"தினம் ஒருமுறை
என்னை செருப்பால்
அடித்து விடேன் - உன்
தொந்தியெல்லாம் குறைந்துவிடும்"

மின்தூக்கி*யில் நுழைந்த
மனிதனைப் பார்த்து
படிக்கட்டுகள் கதறின ;


மின்தூக்கி - Lift

தமிழும் ஆங்கிலமும்



தயிர்சாதம் நடுவே
ஒரு பச்சை மிளகாய்

என் தமிழுக்கிடையே
ஒரே ஒரு ஆங்கிலச் சொல் !!!!

புகழ்


பலூன் போல்
ஆக வேண்டுமா
உனக்கு ?

உன்னைப் பிறர்
புகழும் போது
உன்னைப் நீ
பார்த்ததில்லையா ?!!

நீயும் நாயும்


என் எதிரே
ஒரு நாய்
தன் உடலை
உலுக்கியும் குலுக்கியும்
வெளியேற்றிக் கொண்டது
தன் ஈரத்தை ;

என்ன தான்
என்னுடலை உலுக்கினாலும்
குலுக்கினாலும் என்
உள்ளத்திலிருந்து வெளியேற்ற
முடியவில்லை பாரத்தை ;

Thursday, May 19, 2011

ஃபிகரும் ஃபாரெக்ஸும் - ( தமிழில் குமரியும் குழந்தையும்)


இவர்கள் இருவரின்
வருகை சாமான்யப்பட்டதல்ல ;

காற்று வீசுதல் போல்
மழை தூவுதல் போல்

அது வெறும் சம்பவமல்ல -
சரித்திரம் ;

இவர்களின் வருகை
பெரும் ரகசியம் ;

அந்த ரகசியம்
யாருக்கும் தெரிவதில்லை ;
தெரிந்தாலும் அது
ஏனென்று புரிவதுமில்லை ;

ம்ம்...

ரகசியம் ரகசியமாய்
இருந்தால் தானே - அந்த
ரகசியத்திற்கு மதிப்பு !!

மழையைக் கொட்டிய
பின் மேகத்தை
யார் பார்க்கிறார்கள் ?!

உலகில்
இவர்கள் தான்
விளம்பரமில்லாத அதிசயங்கள் ;

குழந்தை - அதிசயங்களில்
முதல் அதிசயம் ;
குமரி - அதிசயங்களில்
முதன்மையான அதிசயம் ;

இந்த அதிசயங்கள்
மற்ற அதிசயங்கள்
போல் கிடையாது ;

மற்ற அதிசயங்கள்
சில நாடுகளில் தான்;
இந்த அதிசயங்களோ
எல்லா நாடுகளிலும்.....

இவர்கள் தலை
கோதினாலே அது
தலைப்புச் செய்தி ;

இவர்கள் கை
வீசினாலே அது
முக்கியச் செய்தி (லஶ் ணெவ்ஸ்) ;

ஆடையணிந்தால்
இவர்கள் அழகு ;
ஆடை களைந்தாலோ
இவர்கள் பேரழகு ;

இவர்களை மட்டுந்தான் - உலகம்
ஆடையோடும் ரசிக்கும்
ஆடையின்றியும் ரசிக்கும் ;

இவர்களின் முன்
அந்த இமயமே
வந்தாலும் சரி - அது
இறகு தான் ;

பொன், பொருள், புகழ்
அவையெல்லாமே இவர்களுக்குப்
பிறகு தான் ;

இவர்கள்
கருத்தில் இடம் பிடிக்க,
மனத்தில் தடம் பதிக்க

நாம் நம்மை
இழக்க வேண்டும் - பிடிக்காவிட்டாலும்
இந்த உண்மை
விளங்க வேண்டும் ;

ஊழிப் பெருங்காற்றைக் கூட
சமாளித்து விடலாம் ;

ஆனால் இந்த
ஊசிக்குள் நூல் சேர்ப்பது
என்பது அத்துணை
சுலபமானதா என்ன ?

நூலை அனுமதியாமல்
ஊசி போவதுமுண்டு ;

ஊசிக்குள் அகப்படாத
நூலோ அதனால்
ஊசிப்போவதுமுண்டு ;

சுருங்கச் சொன்னால்
அவர்கள் நம்மவர்களாக
நாம் "அவர்களாக" வேண்டும் ;

இந்த இருவர் தான்
கவிதைகளுக்கெல்லாம் தோற்றுவாய் ,
கனவுகளுக்கெல்லாம் ஊற்றுவாய் ;

இந்த இருவரில்
ஒருவர் - படைப்பின் அகரம்,
இன்னொருவர் - படைப்பின் சிகரம் ;

கணிப்பொறியில் செய்த
"மென்" பொருள்கள் ஏராளம் - ஆயின்
ஐம்பொறியில் செய்த
மென்பொருள்கள் இவர்கள் தானே !!!

இன்னும் இன்னும்
எழுதிக்கொண்டே போகலாம்...

ஆனால் ஒரு விஷயந்தான்
கொஞ்சம் நெருடலாயிருக்கிறது...

ஒரு
பச்சிளங்குழந்தையை - எளிதில்
எடுத்து தூக்கி
கொஞ்சி முத்தமிட்டு
மகிழ்ந்து கொள்ளலாம் ;

ஆனால் ஒரு
பச்சிளங்குமரியை..... ?!!!





Friday, May 6, 2011

உடைதல்


உலகிலேயே பலமுறை
உடைபடுவது பூசணிக்காய் தான்

அந்த வரிசையில்
இன்று நானும்....

பலமுறை உடைந்தது
என் உள்ளமும் தானே !!!

Tuesday, May 3, 2011

முரண்பாடு

என் பக்கத்து வீட்டு
இளந்தாய் ஒருத்தி
"பப்பிமா பப்பிமா"
என்று தன்
குழந்தையைக் கொஞ்சிக்
கொண்டிருந்தாள்...

மனிதர்களால் மனிதர்களைத்
தான் உருவாக்க
முடியும் என்ற
உண்மை தெரியாமல் !!!


Thursday, April 28, 2011

ஐந்தா ? ஆறா ?

காகமே !
சுற்றித் திரியும்
சின்னஞ்சிறிய கரிய
மேகமே !!

நான் உன்
ரசிகன் ;

நீ கறுப்பாக
இருப்பதனால் உன் மேல்
வெறுப்பு காட்டுவோர் உண்டு ;
ஆனால் நான் அப்படியல்ல
உன் மேல் அலகிலாத
விருப்பு கொண்டவன் நான் ;

நான் உன்
ரசிகனாயிருந்தாலும் உனை
நின்று ரசித்ததில்லை ;

ஆதலால்
இன்று ஒருநாள்
மற்ற அலுவல்களையெல்லாம்
ஒதுக்கிவிட்டு உன்னை
நின்று ரசிக்கலாமென்று
முடிவு செய்தேன் ;

எங்கு பார்த்தாலும்
நீ இருந்தாய் - அதனால்
உன்னைக் கண்டுபிடிப்பது
ஒன்றும் கஷ்டமாகயில்லை ;

உன்னை நன்றாக
உற்றுப் பார்த்தேன் ;
உற்றுப் பார்த்ததில்
நிறைய பெற்றுக் கொண்டேன்
நிறைய கற்றும் கொண்டேன்

நாங்களெல்லாம் எப்பொழுதேனும்
வீட்டை விட்டு
வெளியே வருகிறோம் ;
ஆனால் நீயோ
அந்த ’வெளி’யையே
வீடாக வைத்துக் கொண்டிருக்கிறாய் ;

நாங்கள் கட்டணம்
கட்டினால் தான்
மின்விசிறி காற்றளிக்கும் - ஆனால்
உனக்கோ கட்டணம்
ஏதும் இல்லாமல்
ஒரு விசிறியை
அந்த காற்றே அளிக்கிறது ;

எங்களுக்கு வெளிச்சந்தரும்
மின் விளக்குகளை
நாங்கள் அணைக்க வேண்டும் - ஆனால்
உனக்கு வெளிச்சந்தரும்
சூரியனையும் நிலவையும்
நீ அணைக்கத் தேவையே இல்லை ;

நாங்கள் பயணிக்க
இரண்டோ அல்லது
மூன்று சக்கரங்கள்
கொண்ட வாகனங்கள் தேவை ;
உனக்கோ உன்
இரண்டு சிறகுகள்
தான் சக்கரங்கள் ;

கறுப்பாக இருந்தாலும்
உன்மேல் யாரும்
இனவெறி தாக்குதல்
நடத்துவதில்லை - ஆயிரம்
யுகங்கள் ஆகியும்
இந்த பூமியில்
இனவெறித் தாக்குதல்
நடக்காத இடமேயில்லை ;

நீ முற்றும்
கறுப்பாக இருந்தால்
உன்னை அண்டங்காக்கை
என்று எக்களிப்போருண்டு ;

ஆனால் உன்
பெயர்க் காரணத்தை
நான் மட்டுமே அறிவேன் ;

"ஹே மனிதா
அறம் மறந்து
நெறி பிறழ்ந்து - நீ
நிலைகெட்டுத் திரியாதே
உன் அன்னை
பூமியை நீ
காக்கத் தவறாதே"

என்ற கருத்தைத்
தான் நீ
பெயராக வைத்திருக்கிறாய் ;

பெயரில் மட்டுமல்ல..
அந்தக் கருத்தை
உன் இதழிலும் வைத்திருக்கிறாய் ;

அதனால் தான்
போகும் இடமெல்லாம்
"கா கா" என்று
கரைந்து கொண்டே போகிறாய் ;

நீ
"கா கா" என்று
கரைந்தாலும் மனிதர்கள்
யாரும் கரைவதில்லை ;

நீ
"கா கா" என்று
கரைந்தாலும் உன்னை
"போ போ" என்று
விரட்டியவரக்ளே அதிகம் ;

கருத்து தெரிவுக்கும்
செயற்கை ஊடகங்கள்
ஏராளம் உண்டு ;

ஆனால் நீ
கருத்து தெரிவுக்கும்
இயற்கை ஊடகம் ;

உனக்காக செலவிட்ட
ஒரு நாள்
என்னுள் பல
எண்ணங்களைச் சிறகடித்துப்
பறக்கச் செய்திருந்தது ;

உன்னை விட்டுப்
பிரிகையில் எச்சமிடுவதைப்
போல் என்
மனதில் ஒரு
கேள்வியை நீ
தூவிச் சென்றுவிட்டாய் ;

ஐந்தறிவு கொண்ட
நீ இன்புற்றிருக்கிறாய் ;
ஆறறிவு கொண்ட
நான் துன்புற்றிருக்கிறேன் ;

ஆதலால்
நீயே சொல்
ஐந்து பெரிதா ?
ஆறு பெரிதா ?

Monday, April 18, 2011

சாயல்

உண்ட மயக்கத்தால் நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தேன்
அம்மா வந்து எழுப்பினாள்
"டேய் அவா எல்லாம் வந்திருக்காடா
உன்ன பாக்கணும்னு சொல்றா
சீக்கிரம் எழுந்து வா"
தூக்கம் மலர்தல் ஒரு வரம்
தூக்கம் கலைதல் ஒரு சாபம்
ம்ம்... என்ன செய்வது
எனக்கு எழவே பிடிக்கவில்லை
மறுபடியும் மறுபடியும் படுக்கையில் விழவே பிடித்தது
இருப்பினும் அம்மாவாயிற்றே அவள் கட்டளைக்குக் கீழ்ப்பணிந்தேன்
கசங்கிய உடைகளை சரிசெய்த படி
கசக்கிய விழிகளை துடைத்த படி
வந்திருந்த விருந்தினரைப் பார்க்கக் கிளம்பினேன்
ஓரைந்து பேர் வந்திருந்தார்கள்
வந்திருந்தோரின் முகமுன் முகமன் கூறினேன்
என்னைப் பார்த்ததும் அவர்கள் பேச ஆரம்பித்தார்கள்
"ஹே அவன் மூஞ்சி அப்படியே அவன் அப்பாவை உரிச்சு வச்சிருக்கு
அவன் கண்ணு அவன் அம்மா கண்ணு தான்
அவன் கலர் அவன் பாட்டி கலர்
அவன் வழுக்கை கூட ......."
அந்த கடைசி வாசகம் எனக்குப் பிடிக்கவேயில்லை
உடனே அந்த இடத்தை விட்டகன்றேன்
என் முகம் என் அப்பா போன்றதாம்
என் கண் என் அம்மா போன்றதாம்....
அவர்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளட்டும்
எனக்கு அதைப் பற்றியெல்லாம் கவலையில்லை
வந்திருந்தோர்க்குத் தான் ஒரு விஷயம் தெரியவே தெரியாதே
என் உள்ளம் மட்டும் உன் போன்றது என்று !!!